காலச்சுவடு மார்ச் 2024 மதிப்புரை பொருளாதார
அகதிகள்
பொருளாதார அகதிகள்
மதிப்புரை
தொ. பத்தினாதன்
அகதியின்
பேர்ளின் வாசல்
(நாவல்)
ஆசி. கந்தராஜா
காலச்சுவடு
பதிப்பகம்
669 கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1
பக்.160
ரூ.200
எல்லாக் காலங்களிலும் புலப்பெயர்வுகள் நடந்திருந்தாலும் அவை
காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எத்தகைய மாறுபட்ட புலப்பெயர்வாக இருந்தாலும்
அதன் மையம் உயிர்வாழ்தல். எல்லா உயிரினங்களும் நிலைத்து நிற்கவும் தன்னுயிர்
காக்கவும் எனப் புலப்பெயர்வுக்கும் இடப்பெயர்வுக்கும் தன்னளவில் தயாராகின்றன.
அத்தகைய உயிரினங்களின் இயங்கு நிலை அடிப்படையில்தான் மனித சமூகம் தன்னைத்
தகவமைத்து வந்திருக்கிறது. மனித சமூகத்தின் இடப்பெயர்வுகளில் பாதகமான நிலைகள்
இருந்தாலும் அதன் சாதகமான வகிபாகம் சமூகத்தில் பல மாற்றங்களை
உருவாக்கிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த மனித சமூக அசைவின்
அடிப்படையில் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவலை அணுகலாம்.
இலங்கையில் ஏற்பட்ட போர், கலவரங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கான புலப்பெயர்வுகள் குறித்துப் பல நாவல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் வெளி வந்திருந்தாலும் அவற்றிலிருந்து மாறுபட்ட புலப்பெயர்வை ஆசி கந்தராஜா இந்நாவல் மூலம் வாசகருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்.
இந்நாவல் மூன்று வேறுபட்ட
நிலப்பகுதிகளை மையப்படுத்தி நகர்கிறது. தவராசா,
பாலமுருகன் என்ற இரு
கதாபாத்திரங்களைப் பிரதானப்படுத்தி நாவல் விரிகிறது. இதில் பாலமுருகன்
ஸ்காலர்ஷிப்பில் மேற்படிப்பிற்காக ஜேர்மன் செல்கிறார். தவராசா போர் காரணமாகத்
தரகர் மூலமாகக் குறுக்குவழியில் ஜேர்மன் செல்கிறார். இவர்கள் இருவரும் எவ்வாறு
ஜேர்மனியில் சந்தித்தார்கள், இருவரின் பயணங்கள் மாறுபட்டனவாக இருந்தாலும் பயணத்தின்வழி
இவர்கள் எத்தகைய சிரமங்களையும் சாகசங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தன என்பவற்றை
நேர்த்தியான புனைவு மொழியில் ஆசி கந்தராஜா எழுதியிருக்கிறார்.
முதல் பகுதியில், 1980க்குப்
பின்னான யாழ்ப்பாணப் பின்னணி, அதன் அரசியல்,
சமூக, பொருளாதார
நிலைகள் என்னவாக இருந்தது ஆகியன நாவலின் ஆரம்பப் பகுதிகளாக அமைகின்றன. பாலமுருகன்
நேரடியாக ஜேர்மனிக்குப் படிக்கச் செல்கிறார். தவராசா தரகர்மூலமாக ஜேர்மன்
செல்வதற்காக மும்பையில் சிலகாலம் சிக்கிக்கொள்கிறார்.
நாவலின் இரண்டாவது பகுதி
மும்பையில் நிகழ்கிறது. 1980க்குப் பிந்தைய மேற்கத்திய நாடுகளுக்கான பயணத்தில்
மும்பையும் பிரதான பாத்திரம் வகித்திருப்பதை நாவலினூடாக அறிய முடிகிறது.
ஆண்கள் மட்டுமின்றி வடக்குக் கிழக்கிலிருந்து தரகர்களின்மூலம் வெளிநாடு
செல்வதற்காக மும்பையில் தங்க நேரிடும் பெண்களின் நிலையைப் பிரமாதமாக நாவல்
பதிவுசெய்திருக்கிறது. குறிப்பாகத் தரகர்களால் ஏமாற்றப்பட்ட கையறு நிலையில்
விபச்சாரம்வரை சென்ற பெண்கள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. அவ்வாறு தரகரால்
கைவிடப்பட்டு மும்பைக்காரரைத் திருமணம்செய்து அங்கேயே வாழும் ‘மன்னார் அக்கா’ என்ற
கதாபாத்திரத்தையும் பதிவுசெய்திருக்கிறார்.
நாவலின் மூன்றாவது
பகுதியாக ஜேர்மனியில் கதை நிறைவு பெறுகிறது.
பாலமுருகன்
கதாபாத்திரத்தின் வழியாக அந்தக் காலத்தில் ஏன் அகதிகளின் நுழைவு வாயிலாகவும்
கூடாரமாகவும் ஜேர்மன் மாறியது என்பதைத் தெளிவாகப் பூகோள அரசியல்ரீதியாகக்
குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போரின் முடிவில் கிழக்கு - மேற்கு ஜேர்மனிகளாக
அவை எப்படி உருவாயின, அதனால் அகதிகள் எப்படி கிழக்கு ஜேர்மன் ஊடாக மேற்கு
ஜேர்மனிக்குள் ஊடுருவினார்கள் என்றெல்லாம் தெளிந்த அரசியல் புரிதலுடன்
குறிப்பிடுகிறார் ஆசி கந்தராஜா.
அந்தக் காலத்தில் இலங்கை
அகதிகளின் அயல்நாட்டுப் பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பைப்போல் ஜேர்மனியும்
விளங்கியிருக்கிறது. புனிதப்படுத்தல்களோ பிரச்சாரத் தன்மையோ இல்லாமல் வெளிப் படையாகக் கதை நகர்வதால் 160
பக்கங்களுடைய இந்த நாவல்
வாசகரை விரைவாக உள்ளீர்ப்பதை ஆசியின் சிறப்பாகக் கொள்ளலாம்.
அவருடைய வெளிப்படையான
பதிவுக்குச் சான்றாக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம்.
அதாவது
“புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையினர் பொருளாதாரஅகதிகள். இவர்களால் உண்மையாக இலங்கையில்
இராணுவத்தால், மாற்று
இயக்கங்களால் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளான அகதிகள் பாதிக்கப்பட்டார்கள்” என்பதை
நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார். இது அவர்களுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டில்
உள்ள முகாம்வாழ் அகதிகளுக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.
மின்னஞ்சல்: pathixyz@gmail.com
No comments:
Post a Comment