Friday, 16 May 2025

டயறிக் குறிப்பு:


விதைகள் இல்லாத திராட்சைக் கொடியின் பதியத் துண்டங்களை (Cuttings) பசுமைக் கூடத்தில் பதிவைத்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்கூட விடுமுறையை எம்முடன் கழிக்கவும் களிக்கவும் எமது வீட்டுக்கு வந்திருந்த மகன் வழி ஆறுவயதுப் பேத்தி, பொரிக்கவென மேசையில் வைத்திருந்த கோழிக்காலை (Chicken drumstick) அப்பம்மாவுக்குத் தெரியாமல் எடுத்து வந்து, மண்ணுக்குள் புதைக்க முற்பட்டாள்.
தாவரத்தின் வெட்டுத் துண்டிலிருந்து புதிய தாவரம் உருவாகுமென்றால் கோழிக்கால்த் துண்டிலிருந்து முழுக் கோழியை உருவாக்கலாம் என்பது அவளது எதிர்பார்ப்பு.
தாவரங்கள் தவிர்ந்த மற்றைய உயர் உயிரினங்களில் கருக்கட்டிய கரு முளையத்திலிருந்தே இன்னொரு உயிரை உருவாக்க முடியும். தசைத்துண்டிலிருந்து புதிய உயிரை உருவாக்கமுடியாது. (குளோனிங் வேறு விஷயம்).
தாவரங்களில் மாத்திரம்தான் கருமுளை கொண்ட விதைகளிலிருந்து மாத்திரமல்ல பதியத் துண்டங்களில் இருந்தும் புதிய தாவரங்களை உருவாக்க முடியும். இது தாவரங்களுக்கு இறைவன் கொடுத்த ஒரு வரம்.
இந்த இயல்பை ஆங்கிலத்தில் Totipotency என்போம்.

Wednesday, 9 April 2025

டயறிக் குறிப்பு 219:

மனத் தெறிப்பு. அமைப்புக்களை உரிமை கோருதல்!


தமிழர்கள் மத்தியில், குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் புற்றீசல்கள் போல அமைப்புக்கள் தோன்றுகின்றன. இவற்றுள் பல, தோன்றிய வீச்சில் மறைந்தும் போகின்றன. ஒரு சில அமைப்புக்கள் வளர்ந்து சமூகத்தில் பிரபல்யமானால், பின்னாளில் அதை உரிமைகோரப் பலர் முன்வருவார்கள். ‘நான்தான் துவங்கினேன், நான்தான் முதல் தலைவர்’ எனச் சொந்தம் கொண்டாடுவார்கள். இவர்களில் பலர், ஆரம்பத்தில் பூட்டைத் திறந்து பூட்டியவர்களாக, சந்தர்ப்பவசத்தால் தலைவராகி ஒரிரு கூட்டங்களுக்கு வந்து ஊமையாக இருந்து நித்திரை கொண்டவர்களாக இருப்பார்கள். இதைத்தவிர இவர்கள் அமைப்பின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாதவர்கள், பின்னாளில் அமைப்புடன் எந்தவித தொடர்புமில்லாமல் இருப்பவர்கள், அமைப்புபற்றிய தெளிதல் இல்லாதவர்கள் என்கிறார் உண்மையான ஒரு சமூக உழைப்பாளி.

இதேவேளை, இவர்களுக்குப் பின் அமைப்பை வளர்த்தெடுக்க கடினமாக உழைத்தவர்கள், உழைப்பவர்கள், தொடர்ந்தும் தமது பங்களிப்பைச் செலுத்துபவர்கள் என சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் கதவைப்பூட்டி மூடியவர்களும் அதிகபட்சம் ஆரம்பத்தில் ஒருசில கூட்டங்களுக்கு வந்தவர்களும் பின்னாளில் அமைப்புக்கு உரிமை கோருவது பொதுவாழ்வின் முரண்நகை.

Thursday, 3 April 2025

எதிர்வினை

ஆசி கந்தராஜா



பதிவு செய்யப்படாத சில சங்கதிகள்!

மார்ச் 28, 2025 அன்று, சிட்னித் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் ஒழுங்கு செய்யப்பப்ட பவளவிழாவுக்கு முதல்நாள், எழுத்தாளர்  நண்பர் முருகபூபதி அவர்கள், மெல்பனிலிருந்து வெளிவரும் அக்கினிக்குஞ்சு இணைய சஞ்சிகையில், பவளவிழாக்காணும் படைப்பிலைக்கியவாதி பேராசிரியர் ஆசி கந்தராஜா என்னும் தலைப்பில் ஒரு விவர்ணக் கட்டுரை எழுதியிருந்தார். அது பின்னர் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இணைய சஞ்சிகையிலும் சிட்னியிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய சஞ்சிகையிலும் பிரசுரமாகியிருந்தது. நண்பர் முருகபூபதிக்கு எனது நன்றிகள்.

எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரை: At the end.

கட்டுரையில் எழுதப்பட்ட தகவல்களை முழுமையாக்கும் நோக்கில் சில உண்மைகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது. காரணம் வரலாறு மறைக்கப்படவும் திரிவுபடவும் கூடாது என்பதற்காக.

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர்.

இவ் அமைப்பு முதுபெரும் எழுத்தாளர் எஸ்பொ அவர்களால் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'பவர்' என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற, 'கொடி கொண்டு முன்னெடுத்துச் செல்லல்' என்பதைக் குறிப்பது. அறியப்பட்ட இந்திய எழுத்தாளர் சி சு செல்லப்பா அவர்கள், முன்னாளில் 'பவர்' என்னும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்னி 'பவர்' அமைப்பில் நானும் ஒரு ஸ்தாபக அங்கத்தவராக அயராது உழைத்தவன் என்பது தற்போது பலருக்கும் தெரியாத உண்மை. இதுபற்றி முருகபூபதி தனது கட்டுரையில் ஏனோ தொட்டுச் சென்றிருக்கிறார். 'பவர்' இன்றுவரை ஒரு பதிவு செய்யப்படாத இலக்கிய அமைப்பு, யாப்பு இல்லாதது. இதனால் தனிப்பட்ட முறையில் இதன் பெயர் எவருக்கும் சொந்தமில்லாதது, உரிமை கோரமுடியாதது.

ஆரம்பத்தில் 'பவர்' அமைப்பின் சார்பில், இலங்கை அரசியல் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் விளக்கும் ஈடு, வீடு, காடு என்னும் தாள லய கவிதைவடிவ நாடகங்களை எழுதி மேடையேற்றத் தீர்மானிக்கப்பட்டது. ஈடு, வீடு ஆகிய இரண்டு நாடகங்கள் மேடையேற்றப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றன. காடு, சில காரணிகளால் முழு வடிவம் பெறவில்லை. ஈடு நாடகம், 1992ம் ஆண்டு சிட்னியில் நடந்த உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் நடிகர் சிவகுமார் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. காடு, மக்குவாறி பல்பலைக்கழக அரங்கில் மேடையேறியது.

இதைத் தொடர்ந்து அன்ரன் செக்கோவின் 'இருதுருவங்கள்' (தமிழ் வடிவம்), Bertolt Brecht என்னும் ஜேர்மன் நாடகவியலாரின் 'ஒரு பயணத்தின் கதை' (தமிழ் வடிவம்), மகாகவியின் 'புதியதொரு வீடு' 'பம்மாத்து' போன்ற காத்திரமான நாடகங்கள் பவர் அமைப்பின் தயாரிப்புக்களாக பல மேடைகளில் மீண்டும் மீண்டும் மேடையேற்றப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றன. இவை அனைத்திலும் முக்கிய பாத்திரங்களில் நான் வேஷம் கட்டியதை இங்கு பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகிறது. 'ஒரு பயணத்தின் கதை' வட்டக்களரி கூத்து வடிவிலான நாடகத்தின் வெற்றிக்கு அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நெறியாள்கை காரணமாயிருந்தது.

சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர் அமைப்பில் நான் தலைவராக இருந்தகாலத்தில், எனது பெரு முயற்சியில் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தின் அரங்கக் கலைகள் பீடத்தின் அனுசரணையுடனும் பாரிய பங்களிப்புடனும் 'சர்வதேச அரங்கக் கலைகள் மாநாடு' சிட்னியில் நடந்தது. பிரதம பேச்சாளராக சிங்கப்பூரிலிருந்து நாடகவியலாளார் இளங்கோவன் வந்து கலந்துகொண்டார். நாடக விற்பன்னர் பாலேந்திரா உள்ளடங்கலாக பலரின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுதி வெளியிடப்பட்டு உலகளாவிய நூலகங்களுக்கு அனுப்பப்ட்டது. இம் மநாட்டில் நாடக ஜாம்பவான்களான மக்கன்டயர், அண்ணாவியார் இளைய பத்மநாதன், சிங்கப்பூர் இளங்கோவன் ஆகியோர் நடாத்திய நாடகப் பட்டறைகளும் நடந்தன.

சில காரணிகளால் 2001ம் ஆண்டு தொடக்கம் எஸ்பொவும் நானும் (எஸ்பொவால் ஸ்தாபிக்கப்பட்ட) சிட்னி தமிழ் அரங்கக் கலைகள் + இலக்கியப் பவர் என்னும் அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து 20 வருடங்கள், துடிப்புடன் இயங்கிய 'பவர்' அமைப்பு எந்தவித கலை இலைக்கிய முயற்சிகளுமின்றி முடங்கிப் போனது சோகம். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்பதே பதிலாக அமைகிறது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.

எழுத்தாளர் முருகபூபதியால் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தில் ஆரம்பகால உறுப்பினராகவும் இரண்டு முறை தலைவராகவும் இருந்து பணியாற்றியிருக்கிறேன். அவை மிகவும் ஆரோக்கியமான காலங்கள். இதுவும் முருகபூபதி தனது கட்டுரையில் சொல்ல மறந்த கதை. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம், தொடர்ந்தும் இலக்கியப் பணியாற்றவும் திரு முருகபூபதி நலத்துடன் நீடு வாழவும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

தமிழ் முழக்கம் வானொலி.

Monday, 24 March 2025

சைவமுட்டை


 ஆசி கந்தராஜா

பிரதி புதன்கிழமைதோறும் ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த நிலையில், கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.

வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன். 

Thursday, 20 March 2025


கயர்

கத்தரிக்காய் வாழைக்காய் அல்லது அப்பிளை வெட்டி, சிறிது நேரம் வைத்தால் பழுப்பு நிற கயர் ஊறுவதைக் கண்டிருப்பீர்கள். இது கலங்களுக்கு உள்ளேயிருக்கும் பொலிபீனோல் (Polyphenol) என்னும் வேதிப்பொருள் வெட்டுமுகத்திலிருந்து வெளியேறி காற்றிலுள்ள ஒக்ஸிஜினால் (Oxygen) ஒக்ஸியேற்றப்படுவதால் ஏற்படுவது. இது ஆரோக்கியத்துக்குக் கேடல்ல. தாராளமாகச் சாப்பிடலாம். இதைத் தடுக்க விரும்பினால் வெட்டியவுடன் தண்ணீருக்குள் போட்டுவிடவும்.

உண்மையில் கலங்களுக்குள் இருக்கும் polyphenol is an antioxidant. மனித ஆரோக்கியத்துக்கு தேவயானது.

Sunday, 2 March 2025


ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு:

வாழை நடுத் தண்டில் பொரியல், துவையல் செய்வது இந்தியாவில் பிரபல்யம். வயிற்றுக்கு நல்லதென்பார்கள். இதை இப்போது இலங்கையர்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இலங்கையர்கள் குலைபோட்ட வாழையின் நடுத்தண்டையே பாவிக்கிறார்கள். இது அதிக பயன்தராது.

இந்தியாவில் பழத்துக்காக மட்டுமல்ல இலைக்காகவும் வாழைகள் வளர்க்கப்படுகின்றன. தொடர்ந்து இலைகள் அறுக்கப்பட்ட வாழைகள் வீரியமாகக் குலை தள்ளாது. எனவே இவற்றின் நடுத்தண்டே சந்தைக்கு வரும். இதிலேதான் மனித சௌக்கியத்துக்குத் தேவையான வேதிப்பொருட்கள் அதிகமிருக்கும். குலை தள்ளிய வாழைநடுத்தண்டின் சத்தை, குலை உறிஞ்சிவிட மிகுதி இருப்பது நார்கள் மட்டுமே.

பின் குறிப்பு: வாழைமரம் ஒரு போலித் தண்டு (Pseudo stem). இலைக் காம்புகள் (மடல்கள்) ஒன்று சேர்ந்த அமைப்பையே நாம் தவறாக வாழை மரம் என்கிறோம்.  இதற்கு மேலதிகமாக இங்கு அறிவியல் விளக்கம் வேண்டாம்.


Saturday, 1 March 2025

காலச்சுவடு மார்ச் 2024 மதிப்புரை பொருளாதார அகதிகள்

பொருளாதார அகதிகள்

மதிப்புரை

தொ. பத்தினாதன்

 

அகதியின் பேர்ளின் வாசல்
(
நாவல்)
ஆசி. கந்தராஜா

காலச்சுவடு பதிப்பகம்
669
கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1

பக்.160
ரூ.200

ல்லாக் காலங்களிலும் புலப்பெயர்வுகள் நடந்திருந்தாலும் அவை காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எத்தகைய மாறுபட்ட புலப்பெயர்வாக இருந்தாலும் அதன் மையம் உயிர்வாழ்தல். எல்லா உயிரினங்களும் நிலைத்து நிற்கவும் தன்னுயிர் காக்கவும் எனப் புலப்பெயர்வுக்கும் இடப்பெயர்வுக்கும் தன்னளவில் தயாராகின்றன. அத்தகைய உயிரினங்களின் இயங்கு நிலை அடிப்படையில்தான் மனித சமூகம் தன்னைத் தகவமைத்து வந்திருக்கிறது. மனித சமூகத்தின் இடப்பெயர்வுகளில் பாதகமான நிலைகள் இருந்தாலும் அதன் சாதகமான வகிபாகம் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த மனித சமூக அசைவின் அடிப்படையில் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவலை அணுகலாம்.

இலங்கையில் ஏற்பட்ட போர், கலவரங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கான புலப்பெயர்வுகள் குறித்துப் பல நாவல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் வெளி வந்திருந்தாலும் அவற்றிலிருந்து மாறுபட்ட புலப்பெயர்வை ஆசி கந்தராஜா இந்நாவல் மூலம் வாசகருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்.