Saturday 3 April 2021

ஆசி கந்தராஜாவின் 'கீதையடிநீயெனக்கு’. ஒரு பார்வை

-ரஞ்ஜனி சுப்ரமணியம்-


புகழ் பெற்ற புனைவுகள் அனைத்தின் ஆழத்திலும் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருப்பது மானுட வாழ்க்கையின் நிஜ தரிசனங்கள்தான். மீண்டும் வாழ முடியாத தன் கடந்த காலத்தின் நினைவுகளை அல்லது கனவு காணும் எதிர்காலத்தை, இன்னொருவரின் எழுத்தில் காணும் வாசகன், அதில் மனம் ஒன்றிப் போகும் கணங்களின் தாக்கமே அந்தப் புனைவுகளின் வெற்றியாக உருமாற்றம் பெறுகிறது.

இந்தவகையில்  ஆசி கந்தராஜா அவர்களின் 'கீதையடி நீயெனக்குஎன்ற குறுநாவல் தொகுதியானதுபுனைவு நிலை கடந்து வாழ்க்கைப் பதிவுகளின் மீட்டல் என்ற நிலைக்கு உயர்கிறது. தத்துவார்த்தமான சிந்தனையைத் தூண்டும் தலைப்பு படைப்பாளியின் சிறந்த உத்தியாகவும்வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதால் புனைவின் வெற்றிக்கு பலம் சேர்ப்பதாகவும் அமைகிறது. ஆறு சிறந்த குறுநாவல்களை உள்ளடக்கிய இந்நூல் சென்னை 'மித்ராபதிப்பகத்தின் வெளியீடாகும். புகழ் பெற்ற எழுத்தாளர்களான  மாலன்எஸ்.பொ. ஆகியோரது முகவுரைகளால் அணி செய்யப்பட்டும் சிறப்புறுகிறது.

தான் பிறந்த மண்ணின் வாசனையை  வாத்சல்யத்துடன் தழுவிக்  கொள்ளும் எழுத்தாளர்களில் இவர் மிக முக்கியமானவர். அது மட்டுமல்ல பேராசிரியராகமிகச் சிறப்பான கல்வித் தகைமைகளுடன் புலம்பெயர்ந்து வாழும் புதிய தேசத்திலும்தன் அறிவையும் அனுபவங்களையும் பகிரும்  நிமித்தம்  வலம்வந்த தேசங்களிலும்பல்லின கலாசாரங்களைக் கொண்ட மக்களுடன் உறவாடும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். அவர்களின் நுண்ணுணர்வுகளை அகம் வாங்குவதிலும்அதனைத் தன் எழுத்தில் இனங்காட்டி விரிவாக்கம் செய்வதிலும் வல்லவர்.உலகத்தின் ஒழுக்குடன் இயைந்து கதைகளை அமைப்பதில்  தனித்துவமான திறமையை வெளிப்படுத்துபவர்.

எனினும் ஆசியின் புனைவுகள் பற்றி எதிர்மறையாக விமர்சிப்போரும் உளர். எழுத்திலக்கியத்தின் இலக்கணம் இதுவென யாரும் வரையறை செய்ய முடியாது. அது யாதொரு புள்ளியில் தரித்து நிற்பதுமில்லை. மாறுபடும் ரசனையைக் காலத்துக்குக் காலம் கொள்வதே அதன் சிறப்பியல்பு.

தற்காலத்துக்கான ஒரு இலக்கியப் படைப்பு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் படைப்பாளர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கக் கூடும்.

படைப்பாளியின் விருப்புக்கிணங்க

தொன்மம்சமகாலம்நவீனம்பின்நவீனத்துவம் என தத்தமது எழுத்தின் பாதைகளை ஒவ்வொருவரும் வகுத்துக் கொள்வர்.  வாசகருக்கு விளங்காமல் எழுதுவதே மேன்மை என்ற பெருவிருப்புக் கொண்டோரும் சிலர் உளர்.

ஆனால் பெரும்பான்மை வாசகரைச் சென்றடைந்துஅவர்களின் ரசனையை உயர்த்தும் அல்லது உயர் சிந்தனைகளை விதைக்கும் படைப்புகளின் இலக்கணங்கள் சற்றே எளிதானவை. புரிந்தால்தானே வாசகன் தன் வாசிப்பு அனுபவத்தை மேன்மைப் படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறான எழுத்துக்களில் 'ஆசி'யின் படைப்புகள் வாசகருக்கு மிக நியாயம் செய்கின்றன என்றே கூறலாம். ஏனெனில் இது வாசகனின் வாழ்க்கைப் பிரதியின் எளிய ரூபம். வாசகனின் ரசனையைக் குறைகாணாது அவனைத் தன் கூடவே அழைத்துச் சென்று உலகின் போக்கைக் காட்டும் பணி அவருடையது.

ஆசியின் புனைவுகளில் கதைமாந்தரின் அகவய உணர்வுகள் அதிகம் பேசப்படுவதில்லை எனவும்புறவயமான தகவல்களின் கட்டமைப்பே அவை எனவும் சிலர் விமர்சித்து இருக்கின்றனர். இது ஓரளவு உண்மையே ஆயினும்புனைவின் மொத்த ரூபத்தில் இக்கருத்து  புறக்கணிக்கத் தக்கதாகவே உள்ளது. பெரும்பாலான கதைகளின் முடிவில் வாசகர் அடையும் புரிதலும்உணர்வு மேலீடும்உறைநிலையும் இக் குற்றச் சாட்டிலிருந்து படைப்பாளியை விடுவிப்பதை ஒரு வாசகராக நான் உணர்ந்திருக்கிறேன்.

எழுத்தில் எளிமைஉட்பொருளில் வாழ்க்கையின் யதார்த்தம்சொற்களில் மண்வாசனைதேசம் பல சென்று தான் கற்றதும் பெற்றதுமான அறிவைப் பல்சுவைகளாக்கிஅதுவும் போதாதோ என்று  இயல்பான நகைச்சுவை எனும் சிறு போதையும்  கலந்துதருவதேகதாசிரியரின்  டைப்புலக சூத்திரம். கதைகளில் ஒரு முக்கிய  கதாபாத்திரமாக  தன்னை இருத்திக் கொள்வதும்அதனூடாக தன் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் அவரது வழக்கம். சில வேளைகளில் சிக்கலான முடிவுகளை வாசகர் கையில் விட்டு விட்டுதான் பார்வையாளராக நழுவிக் கொள்வதும் சுவாரசியமான அனுபவங்கள். குறிப்பட்ட சில கதைகளில் பெண்ணின் ஒழுக்கத்தைக் கேவலப்படுத்தும் ஒரு வசைச்சொல் பல தடவைகள் பிரயோகிக்கப்படும் போது சிறிதே சங்கட உணர்வு தோன்றுகிறது. ஆனால்  கதையில் நியாயமானதும்அவசியமானதுமான உணர்வு நிலையை வாசகனுக்கு உருவாக்க அது தேவையெனில்தூஷண வார்த்தைகள் மட்டுமல்ல நிர்வாணம் கூட ஆபாசமல்ல. 'ஆசி'யின் பாஷையில் சொல்வதென்றால் ரசிப்புக்குரிய  எல்லாவற்றையுமே 'கலந்துகட்டிஎழுதும் 'விண்ணன்அவர் என்றால் மிகையாகாது.

இந்தக் குறுநாவல் தொகுதியில் இருக்கும் ஆறு கதைகளில் அநேகமானவை புனைவின் தேவை கருதி தாயகத்திலும்புலம்பெயர் தேசமொன்றிலும் அகலக் கால்பரப்பி நிற்கின்றன. கடந்த சில தசாப்தங்களாக எம்மவர் வாழ்வில்  தவிர்க்க முடியாததவிர்க்கலாகாத விடயங்களான இனப்பிரச்சனைபுலம் பெயர்வுபுதிய தேசத்தின் கலாசாரங்கள் செலுத்தும் வாழ்க்கைத் தாக்கங்கள் என்பன பேசப்பட்டுள்ளன. வலிமிகுந்த ஈழத்தமிழர் வாழ்வை வாழ்ந்து பார்க்காதவர்களுக்கு மீண்டும் மீண்டும் இவை சார்ந்த புனைவுப் பரப்புகள் சலிப்பைத் தருவதும் இயல்பானதுதான்.

ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர்,  கல்வி நடவடிக்கைகள் சார்ந்து சிறைக்கைதிகளாகச் சந்திக்கும் மூன்று நாட்டு மாணவர்கள் பற்றிய புனைவு 'திரிவேணி சங்கமம்'. இதில் ஈரான்ஆஸ்திரேலிய நாட்டு  மாணவர்கள் இருவருக்கும் மறுவாழ்வுக்கு வழி பிறக்கிறது. தன் காதலியின் மானம் காக்க எதிர்பாராத விதமாக ஒருவனைக்  கொலை செய்து சிறை செல்கிறான் ஒரு ஈழத்து இளைஞன். பெற்றோரை போரில் இழந்து அனாதரவான நிலையிலும்திறமை காரணமாக ஆஸ்திரேலிய  புலமைப்பரிசில் பெற்று கல்வி கற்கும் அவனைதனது கௌரவம் கருதி சாட்சி சொல்லிக் காப்பாற்ற காதலி  முன்வரவில்லை.

இங்கு முன்வைக்கப்படும் கேள்வி தமிழர்களின் சுயநலப் போக்கு பற்றியது. சரியான சந்தர்ப்பத்தில் சாட்சி சொல்ல மறுத்ததால் சாபம் வாங்கிதிரிவேணி சங்கமத்தில்   கண்ணுக்குத் தெரியாது கலப்பது சரஸ்வதி நதி. அது போலவே ஈழத்தமிழரின் துயரங்களும்கண்மூடி மௌனிகளாகும் நம் இனத்தின் சுயநலப்போக்கினால் மானுடகுலத்தின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்தே போகுமோ என்ற கேள்விக்குப் பதிலேதுஈரான் இறுக்கமான கலாசாரத்தைக் கொண்டது. அங்கு  மணமான பெண் ஒருவர்சுதந்திரமான போக்குள்ள ஆஸ்திரேலியாவில் வந்து வாழும் போது உருவாகும் கலாசார மனமாற்றத்தையும்அதனால் மணவாழ்வில் உண்டாகும்  விரிசல்களையும் தனதொரு பாகமாக இப்புனைவு உள்ளடக்கி உள்ளது.

'கீதையடி நீயெனக்கு'  கதை இரண்டு முக்கிய விடயங்களை வாசகருக்கு இனங்காட்டுகிறது. வெளிநாடு செல்லும் கல்வி அறிவு குறைந்த ஆண்கள் பலர் அங்கு 'நாலு காசுபார்த்தவுடன்ஊரில் நல்ல கல்வியறிவும் அழகும் உள்ள பெண்களை 'வாழ்வளித்தல்என்ற பெயரில் வளைத்துப் போட நினைக்கின்றனர். ஆனால் கல்வியறிவால்  தீர்க்க புத்தியுள்ள பெண்கள் இதை மறுதலித்துசொந்தக் காலில் நிற்கும் வைராக்கியம் கொள்கின்றனர். இதற்கு மறுதலையாக பணபலம் மிக்க 'மேட்டுக்குடிஆண்கள் சிலர் வெள்ளைத் தோலுக்கும் அழகிற்கும் ஆசைப்பட்டு மணம் செய்த பெண்களால்  ஏமாற்றப்பட்டு, வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்து கொள்வதைச் சொல்லுவது 'உயரப் பறக்கும் காகங்கள்'.

புலம்பெயர்ந்து நிலையான வாழ்வைப் பெற்ற பின் தாயக உறவுகளுக்குப் பொருளாதார உதவி புரிவோர் பலர் இருக்கலாம். ஆனால் 'கீதையடி நீயெனக்குகதையில் வரும் பெண்வைத்தியர் போல தமது வசதி வாய்ப்புகளை ஒதுக்கித் தள்ளி மீண்டும் தாயகத்தில் வந்திருந்து தம் சேவையை நல்கக் கூடியவர்கள் மிகச் சிலரே இருப்பர். தமது பிள்ளைகள் புதிய தேசத்தில் வாழ்க்கையில் ஸ்திரநிலை அடைந்த பிறகும் கூடதாயகத்துக்கு மீண்டு வந்து வாழ்தல் என்பது புலம்பெயர்ந்த தலைமுறையினருக்கு  இயலாத காரியம். தமது நிலையான இருப்பு அவர்களுக்கு முக்கியமென்பதை ஏற்றுக் கொள்வது நியாயத்தின் பாற்பட்டது. ஆனால் இப்படிப் பட்டவர்களும் தாயகத்திற்கான தமது ஆலோசனைகளை அளவு கணக்கின்றி 'அள்ளி எறியத்தவறுவதில்லை. இங்கிருக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் வளைந்தோநிமிர்ந்தோவால்பிடித்தோ அன்றி விட்டுக் கொடுத்தோ தமது சேவைகளை நல்கும் அறிவார்ந்த சமூகத்தையும்நியாயமான அரசியல்வாதிகளையும் நிச்சயம்  பாராட்டியாக வேண்டும் என்பதை பலர் மறந்து விடுவதுதான் வருத்தத்துக்குரியது.

முதலாளித்துவசோஷலிச நாடுகளின் பனிப்போரில் துண்டாடப்பட்டுபின் இணைந்த ஜேர்மனியை களமாகக் கொண்ட கதை 'அடிவானம்'. சோஷலிச கொள்கைவாதியான கணவன்,

இணைந்த ஜேர்மனியின் முதலாளித்துவ பொருளாதார மாற்றத்தை புரிந்து கொண்டு முன்னேற முடியாமல் நஷ்டமடைகிறான். அதுவே ஜேர்மன் தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாகிறது. அதே நாட்டில் அகதியாக வாழும் இலங்கைப் பெண்கொடுமை செய்யும் குடிகாரக் கணவனை பிரிந்து இலங்கை செல்ல மனமில்லாது தவிக்கிறார்.

இல்லறம் என்பதன் தாற்பரியம் கீழைத்தேயமேற்கத்திய நாடுகளுக்கு வேறானது.  பெண்கல்வி மற்றும் புலம்பெயர்வுகளின் காரணமாக இந்த வேறுபாட்டின் இடைவெளி குறுகிக் கொண்டே வருகிறதெனினும்கீழைத்தேய கலாசாரத்தில் மணவாழ்வின்  ரத்து என்பதில் அவர்களின் குழந்தைகள் செலுத்தும் பங்குதான் முக்கியமானது. அது தவறும் அல்ல. தனக்கான தீர்மானங்களை எடுப்பதில் நமது பெண்களுக்குரிய சுதந்திரம் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டது. வளரும் போது பெற்றோராலும் திருமணத்தின் பின் கணவர் குழந்தைகளாலும் ஆதிக்கம் செய்யப்படும் முடிவுகள்அவள் மீது விரும்பியோ விரும்பாமலோ திணிக்கப்படுகின்றன. பெண்ணின் எதிர்பார்ப்புமகிழ்ச்சிநிம்மதி என்பவைகளைக் கண்டு கொள்ளாமல்   கலாசாரம்குடும்ப கௌரவம் என்ற கழுமரங்களில் அவளது மனம் கூறாக்கப் படுகிறது.

ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் வெவ்வேறு கலாசாரம்  சார்ந்த இரு  பெண்களின் வேறுபட்ட  சிந்தனைகளை மணமுறிவு  எனும் ஒரு புள்ளியில் இணைக்கும் படைப்பாளியின் நுட்பம் ரசிப்புக்கு உரியது .எனினும் கொடுமை செய்யும் குடிகாரக் கணவனுடன் வாழ்தலை நியாயப்படுத்தும் விதமாகவே வீரசிங்கத்தின் ரூபத்தில் ஔிந்திருக்கும் கதைஞரி்ன் விருப்பமும் அமைந்திருக்கிறதோ என்பதில் சந்தேகம் உண்டு. முடிவில் உடன்படவும் முடியவில்லை. புலம்பெயரும் போதும் ஆணாதிக்க சிந்தனைகளைத் தாயகத்தில் விட்டுச் செல்லாது சுமந்து செல்பவர்கள் பலர் உளர். முதலாளித்துவகம்யூனிச சித்தாந்தங்களின் வேறுபாட்டை  விடவும் ஆழம்  மிக்கதோ நமது பெண் மனதி்ன் அடிவான அர்த்தங்கள்...?

'தூதர்கள்கதை ஜேர்மனிஇலங்கை என இரு களங்களில் நிலைகொண்டு இறுதி யுத்தத்தின் பின்னரான பெரும்பான்மையின  மக்களின் உளமாற்றங்கள் பற்றிப் பேசுகிறது.  யுத்தத்தின் வெற்றியானது நடுநிலையான மிதவாத சிங்கள மக்களில் பலரை இனவாதிகளாக மாற்றியுள்ளது. இந்த யுத்த வெற்றியை வாக்கு இயந்திரமாக உருமாற்றும் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் கோஷங்களும்கொண்டாட்டங்களும் தான் இதற்குக் காரணம். சிங்கள மக்களின் இந்த மனநிலைக்கான காரணமாக ஜேர்மன் பெண்ணின் வாய்மொழியாக வரும் கதாசிரியரின் கூற்று ஆழம் மிகுந்தது.

"இந்திய துணைக்கண்டம் என்கிற பிராந்தியப் பூகோள அமைப்பில் தமிழர்களின் பெரும்பான்மை பற்றிய எண்ணம்அரசியல்வாதிகளினால் சிங்கள மக்களுக்குள் வளர்க்கப்பட்டு உள்ளது. அதனால் இலங்கையின் பெரும்பான்மை இனத்துக்கு  இருக்கக் கூடாத சிறுபான்மை உணர்வும்இதன் காரணமாக ஏற்படும் தாழ்வுச் சிக்கலுமே சிங்கள அரசியல் தலைமைத்துவத்தை ஆட்டிப் படைக்கும் பிரச்சனையின் ஆணிவேர்". இதையே தனது மேட்டிமைக்காக அரசு பயன்படுத்திக் கொள்கிறது. இத்தகைய மேலாதிக்க  மனோநிலை கொண்டு  வெளிநாடுகளில் வலம் வரும் சில்வாபண்டா போன்ற 'தூதர்களில்சர்வதேசத்தின் மனநிலை தங்கியிருப்பதில்லை என ஆறுதல் கொள்ளும் அதே நேரம்மேற்குலகின் பிரதிநிதிகளாக நிலைமையைச் சரிவர புரிந்துகொள்ளும் எரிக்மேரி போன்றவர்களால் மனம் பெருமிதம் கொள்கிறது.

முஸ்லிம் மக்களுக்கென பல நாடுகளும்வளமான பொருளாதார பலமும் உள்ளன. தமிழர்களுக்கென உலகில் வேறெங்கும் கூட தனியான தேசமோ மிகுதியான பொருளாதார பலமோ கிடையாது. எனினும்  வடக்கிற்கு அருகிருக்கும் தமிழ்நாடு பற்றிய அச்ச உணர்வானதுசிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட  இலங்கையின் இந்த நிலப்பரப்பில்எக்காரணம் கொண்டும்  தமிழர்கள் சிறுஆதிக்கம் செலுத்தவாவது  இடம் தரப் போவதில்லை. அதனால் இங்கு தமிழர்கள்  சிறுபான்மை இனமாக மட்டுமல்ல சிறுமைப்படும் இனமாகவும் இருக்க வேண்டியது  விகிதாசாரத்தின் கட்டாயம். வடக்கும் தெற்கும்  மனதால் இணைந்த தேசம் என்றாவது உருவாகுமா என்று ஏங்கும் சமநிலை நோக்குடையோரின் ஆசை நிராசையாகவே போய் விடுமோ.....?

புலம்பெயர் வாழ்வில் முதுமை என்பது வரமாக அமையாமல் சாபமாக அமைந்த பலர் இருக்கக் கூடும். அதற்கான  மெய்நிகர் அனுபவமாக 'பாவனை பேசலன்றிஅமைகிறது.  தாயகத்தில் சுதந்திரமாகவும்கண்ணியமாகவும் வாழ்ந்தவர் சின்னத்துரை வாத்தியார். புலம் பெயர்ந்த பின் மகன்மருமகளுடன் வாழ்வதோ முதுமை பரிசளித்த தனிமைச்சிறையில். அங்கு அவர் ரசித்துப் புகைக்க முடியாது போன கல்வியங்காட்டு சந்தையில் வாங்கிய சுருட்டு வாசனைஇன்னும் என் மனக்கம்பளத்தை விட்டு நீங்காது ஒட்டியிருக்கிறது. அவர் அணிய விரும்பிய வேட்டியும்சாப்பிடவிரும்பிய  குத்தரிசிச் சோறும் இன்னும் என்னென்னவோ ஆசைகளும் மகள் சித்திரலேகா போலவே அகால மரணம் அடைந்து விட்டன.

ஏனையோரின் பகட்டுக்காகவாழ்நாளில் கண்டிராத அலங்கார பூஷிதராக வலம் வரும் அவரின் மரணச் சடங்கினையும்இறுதி ஊர்வலத்தையும் சிட்னி றொக்வூட் மயானத்திலிருந்து  நேரலையாக காண வைத்த கதையாளருக்கு கனத்த இதயத்துடன் பாராட்டுக்கள். சரீரத்தின் மரணத்துக்கு நீண்ட காலத்துக்கு முன்பதாகவே  மனதால் மரணித்த வாத்தியாரின் ஓலத்தைஅவரின் மகளை விரும்பிய  அன்புக்குரிய  மாணவனைத் தவிர வேறு யாரும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. தாயகத்திலிருந்து வந்து பிள்ளைகளுடன் புதிய தேசத்தில் இணைந்துஅந்நாட்டு பழக்கவழக்கங்களுக்கு இயைந்து போகத் தெரியாத முதியவர்களால்   உண்டாகும் சில பிரச்சனைகளைபுலம்பெயர்ந்து நிலைகொண்ட  சமூகத்தின் சார்பாகவும் நோக்கின்யதார்த்தமான சில நடைமுறைச் சிக்கல்களையும் புரிந்து கொள்ள முடியும். எனினும் இந்தக் கதையால் உண்டான உணர்வலைகளை வெளிப்படுத்த வார்த்தைகள் சக்தி அற்றவை. ஆசியின் படைப்புகளில் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்த கதை இது.

ஆசி கந்தராஜா அவர்களின் இந்தப் படைப்பை வாசிக்க கிடைத்த இத் தருணம் மிக அழகானது. அவரது புனைவுகளின் அகண்ட நோக்கில்அகலிக்கும் விழிகளின் அனுபவங்கள் அடிக்கடி நிகழ வேண்டும்.

ரஞ்ஜனி சுப்ரமணியம் (March 2010)

No comments:

Post a Comment