கருகம்பனையும்
காய்வெட்டிக் கள்ளும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின்
அறுபது எழுபதுகளில் 'கருகம்பனை' என்று அழைக்கப்படும் ஓர்
பெண்மணி எமது அயலில் வாழ்ந்தார். நான் உட்பட ஊரிலுள்ள பலரும், 'கருகம்பனை'தான் அவரது பெயரென எண்ணியிருந்தோம். இந்தப் பத்தி எழுதுவதற்கு
முன்னர், ஊரில் வாழும்
பெரிசுகளிடம் அவரது உண்மையான பெயர் என்ன? எனத் தட்டிப்பார்த்தேன். ம்ஹூம்! இன்றுவரை ஒருவருக்கும் அவர் பெயர் தெரியவில்லை.
கருகம்பனை என்ற ஊரில் பிறந்த அவர், எமது ஊரில் வாழ்க்கைப்
பட்டதாக, கோவில் பெரிய குருக்கள்
சொன்னார். ஊர்ப் பெயருக்கு ஏற்றபடி கரிய, நெடிய, திடமான உடல் தோற்றம்
கொண்ட அவர், பாயில் கிடந்து
அழுந்தாமல் தனது தெண்ணூற்று ஐந்தாவது வயதில் மாரடைப்பு வந்து காலமானதாக
அறிந்தேன்.
கருகம்பனை, யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டி கீரிமலை வீதியில், கீரிமலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிராமம். பெயருக்குச் சாட்சியாக அங்கு பனைகள் நிறைந்திருந்தன. உண்மையைச் சொன்னால், நான் மஹாஜனாக் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பில் சேரும்வரை கருகம்பனை பற்றிக் கேள்விப் பட்டதில்லை. மஹாஜனாக் கல்லூரியை பாவலர் துரையப்பா, கொட்டில் கட்டி ஆரம்பித்தபோது, தேவைப்பட்ட பனைமரங்கள் அங்கிருந்துதான் தறித்து வரப்பட்டதாகச் சொன்னார்கள். கருகம்பனைக் கதையுடன் கூவில் கள்ளும் கவுணாவத்தை வேள்வியும் சேர்ந்தே வரும். கருகம்பனைக் கிராமத்திலும் அதன் அருகேயுள்ள கூவில், வெளிக்கூவில் பிரதேசங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எண்பதுகள் வரை வைரம் பாய்ந்த, நூறு வருடங்களுக்கு மேற்பட்ட பனைகள் நின்று ஆட்சி புரிந்ததாக, பிறிதொரு தகவல் சொல்கிறது.
கருகம்பனை போலவே, சூரிய வெளிச்சம் நிலத்தில் விழாத அளவுக்கு அடர்த்தியாக
வளர்ந்த, யாழ் மற்றும் வன்னிப்
பனங்காடுகள் இனப்போரின் பெயரினால் மொட்டையடிக்கப் பட்டுவிட்டன. நான் பிறந்த கைதடி
வடக்கில் 'கொத்தாக் கூடல்' என்னும் பெயரில் ஒரு
பனங்கூடல் இருந்தது. அங்கு ஆயிரம் பனைகளுக்கு மேல் நின்றிருக்கும். அப்போது எனது
மூதாதையரின் வீட்டுக்கு வழி சொல்ல, அது ஒரு அடையாளமாகப் பயன்பட்டது. அதிகாலைகளில் அங்கு சிரம பரிகாரம் செய்ய
பனைகளின் மறைவில் குந்துபவர்கள் அநேகர். கைதடிச் சந்தியை தொட்டுச் செல்லும்
யாழ்-கண்டி வீதிக்குச் செல்ல, வடக்குக் கைதடியிலிருந்து பனங்கூடலூடாக குறுக்கு வழியில், மிதிவண்டியிலும் நடந்தும்
செல்வார்கள். அப்படி மிதிவண்டியில் செல்லும்போது பனங்காய் முதுகில் விழுந்து
நோஎண்ணை போட்டுத் திரிந்த பலர் இப்பொழுது என் ஞாபகத்துக்கு வருகிறார்கள். இவ்வாறு
என் இளமைக்கால வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த கொத்தாக்கூடலில் ஒரு பனை மரம்கூட
இல்லாமல் இப்பொழுது அழிந்து போனது பெரும் சோகம். இந்த வகையில் பனையும் தென்னையும்
போரின் அவலங்களைச் சுமக்கும் தற்போதைய அடையாளங்கள்.
ஈழத்தில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை 5,500,000 என்று, 2009ம் ஆண்டு மதிப்பிடப்
பட்டது!
யாழ்ப்பாணத்து மக்களாலே கற்பகதரு எனப்
போற்றப்படும் பனை மரங்களைப் போலவே, பேரீச்ச மரங்களிலும் ஆண் மரம், பெண் மரம் என்ற வேறுபாடு உண்டு. ஆனால் தென்னை, கமுகு மரங்களில் அப்படியல்ல. இவற்றில் ஆண்பூவும் பெண்பூவும்
ஒரே மரத்தில், ஒரே பாளையில் இருக்கும்.
இவற்றின் பாளைக் காம்பில்,
பெண்பூவொன்று
அடிப்பக்கத்திலும், அதைத் தொடர்ந்து பல ஆண்
பூக்கள் பூக்காம்பின் நுனிவரையும் இருக்கும். மகரந்தச் சேர்க்கையின் பின்
ஆண்பூக்கள் உதிர்ந்துவிட,
பெண்பூ
கருக்கட்டி, குரும்பட்டியாகி பின்னர்
தேங்காயாகவும், கமுகமரத்தில் பாக்காகவும் மாறும்.
பனை மரங்களைப் பொறுத்தவரையில், மகரந்த மணிகளை மாத்திரம்
கொண்ட ஆண் பூக்கள் ஆண் பனைகளிலும், சூலகத்தைக் கொண்ட பெண் பூக்கள் பெண் பனைகளிலும் இருக்கும். பல பெண்பனைகள்
கொண்ட பனங்கூடலிலே ஒரு சில ஆண்பனைகள் மட்டும் தனிக்காட்டு ராஜாக்களாக நின்று
ராஜாங்கம் நடாத்துவதை, புலம் பெயர்ந்த நாடுகளில்
வாழும் கொழும்புத் தமிழ் மூத்த பிசைகளும் அறிந்திருப்பார்கள்.
பனை ஏறுவது மிகவும் கஷ்டமான தொழில். ஏறுபட்டி, தளநார், நெஞ்சுத்தோல், தட்டுப் பொல்லு, பாளைக் கத்திகளுடன்
பனைமரம் ஏறும் எங்கள் ஊர் வட்டர்(ன்) இன்றும் என் மனதில் வாழும் அன்புக்குரியவர்.
விவசாயியான எங்கள் பெரியையாவுக்காகத் தினமும் மாலையில் மாட்டுகளுக்குத் தீனியாக
பனையோலை வெட்டிவருவார் (1960-75). நுங்கு காய்க்கும்
காலங்களில் பதமான நுங்குகள் எனக்காக வெட்டிவருவார். இரவில் நாமெல்லோரும்
முற்றத்தில் அமர்ந்து ஈக்குகளை நீக்கிப் பனையோலை கிழிப்போம். அது தினந்தோறும்
இரவில் நடக்கும் குடும்ப மாநாடு. அப்போது குடும்ப விஷயங்கள் தொடக்கம்
ஊர்ப்புதினங்கள் வரை அங்கு அலசி ஆராயப்படும். இது எத்தகைய சுகமான அநுபவங்களும்
காலங்களும்!
என்னுடைய ஆச்சிக்கு, அம்மாவின் அம்மாவுக்கு, நிறைய பனங்காணிகள்
இருந்தன. பனங்காணிகளில் எதேச்சையாக ஈச்ச மரங்களும் வளர்ந்தன. இவை பேரீச்ச
மரங்களின் இனமாயினும் வளர்ச்சியில் குட்டையானவை. இவற்றிலே அளவில் சிறிய, கறுப்பு நிற ஈச்சம்
பழங்களை பறித்துச் சாப்பிடுவதில் எனக்கும் பால்ய நண்பன் சிவராசனுக்கும் சண்டை
வரும். நமது ஈச்ச மரங்களில், பாளை வெளிவரும்போது அதை வெளியில் இழுப்பதும், அதன் அடிப்பகுதியிலுள்ள மென்மையான பகுதியைச் சப்புவதும் மிக
இனிமையான அநுபவம். பாளை இழுப்பதற்கு சிவராசன் ஒரு பாட்டு வைத்திருந்தான். அந்தப்
பாட்டில் எல்லா தெய்வங்களையும் துணைக்கழைத்து இறுதியில் 'பாளையே, பாளையே, கெதியாய் வா கெதியாய் வா' என்று சொல்லி தம்
பிடித்து இழுப்பான். இழுத்த இழுப்பில் பல தடவை அருகேயுள்ள ஈச்சம் பத்தைக்குள்
விழுந்தெழும்பியதும் உண்டு.
ஆண், பெண் பனை மரங்களில் அவற்றின் பூம்பாளைகளில் இருந்து பதநீர், கள்ளு என்பன பெறப்படும்.
ஆண் பனையிலிருந்து அரிபனை,
வள்ளுபனை
முறைகளிலும், பெண் பனையிலிருந்து
தட்டுப்பனை, காய்வெட்டி முறைகளிலும்
இவை வடிக்கப்படுகின்றன. ஆண் அல்லது பெண் பூம்பாளைகள் வரிந்து கட்டப்பட்டு, தட்டுப் பொல்லால்
மென்மையாகத் தட்டப்படும். இதனால் அவற்றின் கலங்களும் இளையங்களும் சிதைபட, பாளையின் வெட்டுமுகம்
வழியாக வழியும் சாறு, பாளையின் நுனியில்
கட்டப்படும் முட்டிகளில் சேகரமாகும். இந்தவகையில் முதலில் சேர்வது இனிப்பானது, குளுக்கோஸ் நிறைந்தது.
இந்த இனிப்பான சாறு நொதித்துப் பின்னர் எதைல் அல்க்கஹோல் செறிவு கொண்ட கள்ளாக
மாறும்.
குளுக்கோஸ் செறிவு கொண்ட பதநீர் நொதித்து
அல்க்கஹோல் செறிவு கொண்ட கள்ளாக மாறாதிருக்க முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பு
பூசப்படும். குடிக்கும்போது சுண்ணாம்பின் காரச் சுவையை நீக்க, அமிலச் செறிவு கொண்ட புளி
மாங்காய்த் துண்டங்கள் பதநீருக்குள் போடப்படும்.
பங்குனிக்கு பரவுகள்ளு, சித்திரைக்கு சிதறுகள்ளு, ஆனிக்கு அரிபனைக் கள்ளு,
ஆடிக்கு அருந்தள்கள்ளு,
ஆவணிக்கு
காய்வெட்டிக்கள்ளு என்ற சொல்லடை ஊரில் உலாவுவதுண்டு. ஆனால் இவற்றுக்கான அர்த்தம்
இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இது எதுகை மோனைக்காகச் சொல்லப்பட்டதோ என்றும்
தெரியவில்லை!
கருகம்பனை கிராமத்தை மருவியுள்ள கூவில்
பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள், பரம்பரை பரம்பரையாக கள்ளுச் சீவுபவர்கள். இவர்கள், பாளையை அடித்துத் தயார்படுத்துவதில்
மற்ற ஊர்ச் சீவல் தொழிலாளர்களை விடத்
திறமைசாலிகள் என, கருகம்பனையைச்
சேர்ந்தவரும் தற்போது பிரான்ஸில் வசிப்பவருமான சின்னத்தம்பி ராதாக்கிருஷ்ணன்
சொல்கிறார்.
பொன்னாலை பருத்தித்துறை வீதி, கூவில் கிராமத்திற்கு
அருகில் இருக்கும் அந்திராணை, நாச்சிமார் கோவிலடி, சிங்கத்தின்காடு, வெளிக்கூவில், மற்றும் வலித்தூண்டல், சேந்தான்குளம் போன்ற
கரையோரக் கிராமங்களை மருவிச் செல்கிறது. வீதியின் தெற்குப் பகுதியில் நின்ற பனை
மரங்கள் எல்லாம் தொண்ணூறுகளில், 'அபிவிருத்தி' என்ற பெயரால்
அழிக்கப்படும்வரை, நூறு ஆண்டுகளைக் கடந்தவை
எனத் தெரியவருகிறது. இதில் கருகம்பணை, நாச்சிமார் கோவில் மற்றும் அந்திராணை, கவுணாவத்தை வைரவகோவிலைச் சுற்றியிருக்கும் காணிகள் ஒவ்வொன்றும் பலநூறு பனைகளை
கொண்ட தனியார் காணிகள் எனக் கணக்குச் சொல்கிறார் ராதாக்கிருஷ்ணன்.
காய் வெட்டிக் கள்ளே கூவில் கள்ளுக்கு அதிக 'சுதி' சேர்ப்பது. இது குரும்பை
முற்றி நுங்காகி சீக்காய் ஆகும் தருணத்திற்கு முன்னர் வடிக்கப்படுவது. பாளைத்
தண்டின் முற்பகுதியில் இருக்கும் பனம் காய்களை அறுத்து, தண்டின் அடியில் மட்டும் சில காய்களை
விட்டு, தட்டுப்பொல்லால்
அடித்துப் பதப்படுத்தியிய பின்னர் கூரிய
பாளைக் கத்தியால் பாளையின் நுனியைச் சீவி, கள் எடுப்படும். இந்தக்
கள்ளுக்காலம் 'காய்வெட்டி'சீசன் எனப்படும். வைகாசி
தொடக்கம் ஆவணி மாதங்களில் எறிக்கும் கடும் வெய்யிலில் இதை அருந்துபவர்கள், அமிர்தம் என்பார்கள். இது வடிக்கப்படும் காலம் இடத்துக்கு இடம் மாறுபடலாம்.
வெய்யில் காலத்தில், அதிக குளுக்கோஸ் செறிவு
கொண்ட காய்வெட்டி கள்ளு விரைவாக நொதிக்கும். இதை அருந்தினால் அதிக 'கிக்' ஏறும் என்பது பெரும்
குடிமக்களின் அபிப்பிராயம். கருகம்பனை, கூவில் பிரதேசங்களில் கள்ளிறக்கியவர்களின் கருத்துப்படி,
காலை மாலை நேரங்களில் கள்ளுச் சேகரிப்பதற்காக கட்டப்படும் முட்டி, நிரம்பி வடியும் என்றும்
இந்த மரங்களின் கள்ளு இனிப்புக் கலந்த சுவையுடன் இருக்கும் என்றும் தெரிகிறது.
இவற்றின் பின்னணியில், கருகம்பனை மற்றும் கூவில்
பிரதேச கள்ளு, ஏன் சிறந்தது? என ஆராய்ந்தால், அங்கு நின்ற பனைகளின்
வயதும் மண்ணின் வளமும், பாளைதட்டும் தொழில்நுட்ப முறையும்தான் காரணங்கள், என்ற முடிவுக்கு வரலாம்.
பனையும் அதன் பானமும் அவற்றை உண்டு தமிழிலே
களிப்புற்ற பாணருமே நமது தமிழ்க் கலை இலக்கிய வடிவங்களுக்கு முதன் முதலாக வடிவமும், வகையும், சுவையும் அளித்தனர்.
பொருநர், மதங்கர், கூத்தர், பாணர், பாடினி, விறலி என்கிற சொற்கள்
அனைத்தும், பாணர் சேரியிலே வாழ்ந்து, ஐந்திணை நிலங்களையும்
அடியளந்து அலைந்து திரிந்து, இயல் இசை நாடகமென முத்தமிழையும் வளர்த்த தமிழ்க் கலைஞர்களையே குறித்தன.
அவர்கள் கலைஞர்களாகவும் மகிழ்வூட்டுவோர்களாகவும் படைப்பாளிகளாகவும்
விளங்கினார்கள். பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவைஞர்களுடன் பங்கிடுவதற்கு, உற்சாக பானமாகக் கள்ளே பயன்பட்டது. எனவே சங்க காலத்திலே தமிழின் படைப்புக்கும்
சுவைக்கும் ஊடக பானமாக விளங்கிய கள், மதுவகையிலே சேர்க்கப்படாது, உணவு வகைகளிலே சேர்க்கப்
படவேண்டும்...!
ஆசி கந்தராஜா
No comments:
Post a Comment