Tuesday 5 October 2021


'பலாக் கட்டை'



செண்பகவரியன் பலாப்பழம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. இதில் இளம் சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறைய சுளைகள் இருக்கும். மிகவும் இனிப்பான, நார்த்தன்மை அற்ற இச் சுளைகளைக் கடித்தால் தொதல் போல இரண்டு துண்டாகும். எங்கள் வளவிலும் செண்பகவரியன் பலாக் கட்டையை, சாவகச்சேரி சந்தையில் வாங்கி நட்டோம். அது கிசுகிசுவென வளர்ந்து வஞ்சகம் செய்யாமல் காய்த்தது.

பலாக் கட்டை என்ற பதம் சற்று விசித்திரமானது. பலா மரத்தின் நீண்ட கிளையை வெட்டிப் பதிவைத்த வெட்டுத் துண்டை, பலாக் கட்டை என்பார்கள்.

பதிவைத்த நிலத்தை வைக்கோலால் அல்லது வாழைத் தடலால் மூடித் தண்ணீர் ஊற்றும்போது, காற்றின் வெப்ப நிலையிலும் மண்ணின் வெப்பம் கூடுவதால், மேலே குருத்துவர முன்பு கீழே சல்லி வேர்கள் அரும்பும்.

தாவரங்களின் வெட்டுத் துண்டங்களை (Cuttings) பதியனிடும்போது மேலே கிளைகள் வளர முன்பு, கீழே வேர்கள் வளரவேண்டும். அதற்காகத்தான் விவசாய பண்ணைகளில் பதியன்களை இளம்சூடுள்ள மேசையில் (Heated Bench) வைப்பது.

இதேவேளை காற்றின் வெப்பநிலை, மண்ணின் வெப்ப நிலையிலும் கூடுதலாக இருந்தால், வேர்கள் வரமுன்பு கிளைகள் வளர்ந்து, பதியன்களின் சத்தை உறுஞ்ச, பதியன்கள் செத்துவிடும். இது றோசா உட்பட எந்த பதியன்களுக்கும் பொருந்தும்.

Soil temperature > Air temperature = Roots

Air temperature > Soil temperature = Shoots

இந்த வகையில் வேர் வைத்த பலாக் கட்டையை மண்ணுடன் கிளப்பி ஒரு சாக்குத் துண்டால், வேரையும் மண்ணையும் சேர்த்து, பொட்டளி போலக் கட்டி, சந்தையில் விற்பார்கள்.

ஏன் இந்த வில்லங்கம்? செண்பகவரியன் பலாக் கொட்டையை முளைக்க வைக்கலாமே? அதற்கு நல்ல ஆணிவேர் இருக்குமல்லவா? என நீங்கள் எண்ணக்கூடும்.

கொட்டைக்கண்டுக்கு ஆணிவேர் இருக்குமென்பது உண்மைதான். ஆனால், விதையில் முளைக்கும் தாவரத்தில், தாய் மரத்தின் இயல்புகள் இருக்குமென்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் பதியன்களில், தாய்மரத்தின் இயல்புகள் சகலதுமிருக்கும். அத்துடன் அது விரைவில் காய்க்கும் திறனும் கொண்டது.

எங்கள் வீட்டு கூழன் பலா, விதையில் முளைத்ததுதான். அது கூழன் பழம் காய்க்குமென முன்னரே தெரிந்திருந்தால் ஐயா அதை நட்டிருக்கமாட்டார்.


No comments:

Post a Comment