கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே...!
அன்று வைகாசி விசாகம். எங்கள் குடும்ப வைரவருக்கு முக்கனிகள் சகிதம் படையல்
வைத்தோம். கந்தையா அம்மானின் தோட்டத்தில் வெட்டிப் புகைப் போட்டு, பழுக்க வைத்த, ஆமான கதலிக் குலை, கறுத்தக் கொழும்பான்
மாம்பழம், அடி மரத்தில் காய்த்துப்
பழுத்த பலாப்பழம் என, பல வகைப்பட்ட பழங்கள், வைரவரின் மடைக்கு வரிசை
கட்டி நின்றன.
பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடங்களுடன் நான் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்
இந்துசமயமும் படித்தேன். இலக்கியத்தில் பாரதி பாடலுடன் பாரதிதாஸன் பாடல்களையும்
சிற்றம்பலம் மாஸ்டர் படிப்பித்தார்.
'கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே, இங்கு வேரிற் பழுத்த பலா' எனத் துவங்கும்
பாரதிதாஸன் பாடலை, அன்றைய இலக்கிய வகுப்பில்
வாசித்து, சிற்றம்பலம் மாஸ்டர்
பொழிப்புரை சொன்னார்.
எனக்கு எப்பொழுதும் குறுக்குப் புத்தி. வேரில் கிழங்குதானே விழும், எப்படிக் காய் காய்த்துப்
பழுக்கும்? என என் மூளை, குறுக்குச் சால் ஓடியது.
இதை தாவரவியல் படிப்பித்த வாத்தியாரைக் கேட்கப் பயம். அமைதியாக இருந்துவிட்டேன்.
தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும்
தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் Under ground stem என்போம். இதிலிருந்து தோன்றிய முகை அரும்பாகி, மண்ணுக்கு வெளியே எட்டிப்
பார்த்து, காயாக மாறும்போது அது
வேரில் காய்த்தது போலத் தோன்றும். இதைத்தான் வேரில் பழுத்த பலா என்பார்கள். எந்த
மரத்திலும் வேரிலிருந்து காய்கள் தோன்றுவதில்லை, என்ற இந்த உண்மையை நான் பல்கலைக் கழகத்தில் விவசாயம்
படித்தபோது தெரிந்துகொண்டேன்.
உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள்.
உண்மைதான். அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக்
கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை. இவை மண்ணுள்
புதைந்திருக்கும் தண்டில் உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியை பிடுங்கிப்
பார்த்தால் கிழங்குகள் அடித் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருப்பதைக் காணலாம்.
இந்த இயல்பின் அடிப்படையிலதான், ஆய்வு கூடத்தில் அறிவியல் ரீதியாக இளைய வளர்ப்பின் மூலம் தண்டில், நோய்களற்ற விதை உருளைக்
கிழங்குகள் பெறப்படுகிறது.
மரவெள்ளியில் வேர்போன பக்கமெல்லாம் வேரிலே கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக்
கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை
நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை.
படம்: ஆய்வு கூடத்தில் தண்டில் உற்பத்தியான உருகைள் கிழங்கு
No comments:
Post a Comment