Thursday, 14 October 2021

நிர்வாண அடி!

நிர்வாண அடி!

சிறுவயதில், எங்கள் வீட்டிலே எனக்கு மட்டுமல்ல, மரங்களுக்கும் அடி விழுவதுண்டு. அவைகளும் பாவப்பட்ட ஜென்மங்கள். வளவில் எந்த மரமாவது காய்க்காமல் டிமிக்கி விட்டால், அடிக்காத மாடு படிக்காது என்ற கொள்கைப்படி, கோடாலியின் பின் புறத்தால் நாலு சாத்து சாத்துவார்கள். அவர்களின் தியறி சில மரங்களில் வேலை செய்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதன் சூக்குமம், நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் வரை விளங்கவில்லை. கோடாலியால் அடிவாங்கிய நோவினால் மரங்கள் காய்க்கவில்லை என்றாலும், அடி வைத்தியத்தில் வீட்டாருக்குத் தெரியாத அறிவியல் விளக்கங்கள் பல புதைந்து கிடப்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஒரு தாவரத்தில் நீரையும் ஊட்டச் சத்தையும் இலைகளுக்கு கடத்துவது, காழ்க் கலங்கள் (Xylem Cells). இதற்கு வெளியேயுள்ள உரியக் கலங்கள் (Phloem Cells) இலையிலே தயாரிக்கப்பட்ட உணவை, வேருக்கும் தாவரத்தின் மற்றைய பகுதிகளுக்கும் கடத்துகிறது. கோடாலியால் மரத்தை அடிக்கும்போது, உணவைக் கடத்தும் உரியக் கலங்கள் சிதைக்கப்பட, தயாரித்த உணவின் பெரும்பகுதி தாவரத்தின் கிளைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் அங்கு உடல் தொழில் மாற்றங்கள் ஏற்பட்டு, தாவரம் பூக்கத் துவங்கும்.

இதற்கும் மேலாக, பலா மரத்தில் இன்னொரு விஷயமும் நடக்கிறது. பலாவில்,  புதிய அரும்பில் இருந்தே பூக்கள் தோன்றும். கோடாலியால் பலாவில் அடித்த காயம் மாறும் போது, அதிலிருந்து பல புதிய அரும்புகள் தோன்றி பூக்களாகி காயாகும்.

மரத்தைச் சுற்றி நிறைய அடி போட்டால், உரியக் கலங்கள் முற்றாக அறுபட, மரம் செத்துவிடும்.

விவசாய பண்ணைகளில், கூரிய கத்தியால் அடிமரத்து மரப் பட்டையை அரை சென்ரி மீட்டர் அகலத்துக்கு 'இடையிடையே' வெட்டிவிடுவார்கள்.

மரம் நிறையக் காய்க்கட்டும்' என்ற பேராசையில், மரத்தைச் சுற்றியுள்ள பட்டையை முழுமையாக வெட்டி வரைந்து விட்டால், அடுத்த வருடம் மரம், விறகுக்குத்தான் பயன்படும். இதை விடுத்து, வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மந்திர உச்சாடனம் செய்தபடி கோடாலியால் மரத்தை அடிக்க வேண்டுமென்பதோ, நடு இரவில் நிர்வாணமாய் சென்று அடிக்கவேண்டும் என்பதோ, வெறும் கட்டுக் கதைகளே.


No comments:

Post a Comment