Tuesday, 19 October 2021



ணைய சஞ்சிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூவாமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது.

நீங்களும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை என அடித்துச் சத்தியம் செய்வீர்கள்.

ஆனால் அது உண்மையல்ல!

பலாமரம் பூக்கும். பலாவின் பூக்கள் பல்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறு வேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்.

பெண் பூக்கள், பெரும்பாலும் அடி மரத்திலும் கொப்பின் அடிப்பாகத்திலும் தோன்றும். சில சமயங்களில் மேல் கிளைகளிலும் குறைவான எண்ணிக்கையில் தோன்றுவதுண்டு.

பலாவில் பெண் பூக்கள் என்பது ஒரு மஞ்சரி. இதையே வேறு விதமாகச் சொன்னால், பல பெண் பூக்கள் சேர்ந்த கூட்டுக் காம்பிலியே, மஞ்சரி. மரத்தின் மேலேயுள்ள ஆண்பூக்களின் மகரந்த மணிகள், காற்றின் மூலம் பெண்பூக்களுக்கு கடத்தப்பட, கருக்கட்டல் நடைபெற்று, காய் தோன்றி, பழமாகும்.

பலாப் பழத்தை ஒரு திரள் பழம் அல்லது கூட்டுப் பழம் எனச் சொல்வார்கள். உள்ளே காணப்படுகின்ற ஒவ்வொரு சுளையும், மஞ்சரியிலுள்ள ஒவ்வொரு பூவிலிருந்து தோன்றியவை. பூக்களின் அல்லியும் புல்லியும் சேர்ந்த பூவுறை, சதைப்பற்றான சுளைகளாக மாற, நடுவே விதை, விருத்தி அடைந்திருக்கும்.

பலாப் பழத்துக்குள் இருக்கும் 'பொச்சு' மஞ்சரியிலுள்ள கருக்கட்டாத பூக்களில் இருந்து வந்தவை.




No comments:

Post a Comment