Wednesday 27 October 2021


பணச்சடங்கு- பல்லின பண்பாடுகளின் நுணுக்கமான பதிவு

அலைமகன்


ஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசிகந்தராஜாவின் புதுவரவு, பணச்சடங்கு சிறுகதை தொகுப்பு. ஏற்கனவே அவரது சிறுகதைகள், குறுநாவல் போன்றவற்றால் தமிழுலகில் நன்கு அறியப்பட்டவர். மட்டுமல்லாது, புனைவுக்கட்டுரை என்ற வடிவத்தை தமிழுக்கு அறிமுகம்செய்தது ஆசி கந்தராஜா அவர்கள்தான். தனது பரந்த உலக அனுபவத்தையும், தனது தொழில் மூலமும், கல்வி மூலமும் பெற்ற விவசாய விஞ்ஞான அறிவியலையும் எளிமையாக புனைவு என்ற வடிவத்துக்குள் உள்ளடக்கி பரவலாக்கியவர். தமிழில் இந்த முயற்சிக்கு ஆசி கந்தராஜா அவர்களே முன்னோடியாவார்.

ஈழத்து எழுத்தாளர்களில் மிக நுணுக்கமாக யாழ்ப்பாணத்தின் வாழ்வியல் கோலங்களையும், வட்டார வழக்குகளையும் சித்தரிப்பதில் ஆசிரியர் கைதேர்ந்தவர். குறிப்பாக அறுபது, எழுபதுகளில் யாழ்ப்பாண வாழ்க்கை முறையையும் அதன் உள்ளடுக்ககளையும் இவரின் கதைகளில் எப்போதும் இரசிக்க முடியும். பெரும்பாலும் கதையின் நாயகர்கள் நனவிடை தோயும்போது வரும் விவரிப்புக்கள் உண்மையில் ஆசிரியரின் நனவிடை தோய்தல்தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

முதலில் இந்த கதைகளிலுள்ள பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். இவற்றின் களங்கள் மிகவும் பரந்துபட்டவை. ஆஸ்திரேலியா, லெபனான், இஸ்ரேல், ஈரான், வன்னி, யாழ்ப்பாணம் என்று கதை நகரும் எல்லைகள் உலகளாவியவை. அந்தவகையில் இது ஒரு சர்வதேச, பல்லின பரிமாணம் கொண்ட தொகுப்பு. ஆனால் கதைகளின் கதையோட்டம் உண்மையில்ஒரு யாழ்ப்பாணத்து மனிதனின் பார்வையில் அல்லது அவனது அனுபவத்தில் இருந்துதான் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. கதைசொல்லி ஒருபோதும் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை விட்டு விலகுவதில்லை என்பது அவதானிக்கப்பட வேண்டியது. உதாரணமாக தலைமுறைதாண்டிய காயங்கள் என்ற கதையை குறிப்பிடலாம். புலம்பெயர்ந்த எல்லா ஈழத்தமிழ் மக்களினதும் மனங்களில் அவர்களின் தாய்நிலத்து நினைவுகள் காலம் முழுவதும் வண்டல் மண்ணாக படிந்து போயிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட கால நினைவுகள் மற்றும் தொன்மங்கள் வழியாக வந்த அந்த உணர்வை இலகுவில் அழித்துவிட முடியாது.

அடுத்ததாக, முன்னைய தொகுப்புக்களை விட இந்தத்தொகுப்பில் ஓரளவுக்கு தமிழ் அரசியல் உணர்வு சற்று துலக்கமாக தெரிகிறது என்பது முக்கியமானது. நரசிம்மம், தலைமுறை தாண்டிய காயங்கள் போன்ற சிறுகதைகளை உதாரணமாக சொல்ல முடியும்.

அந்திமம் ஒரு நெகிழ்ச்சியான கதை. கதைசொல்லிக்குத் தனது தாய் தன்னுடன் எவ்வளவோ வசதிகளுடன் இருந்தும் ஏன் தன்னிடம் தாள் காசுகளை கேட்கிறார் என்றோ, அவற்றை ஏன் மிகவும் பத்திரமாக காப்பாற்றுகிறார் என்றோ விளங்கிக்கொள்ள முடியவில்லை. இது பொதுவாக அந்திம காலத்தில் எல்லோரிடமும் இருக்கும் இயல்பு என்றே எண்ணத் தோன்றுகிறது. அல்லது நீண்டகாலமாக யாழில் பெண்களின் பொருளாதார பாதுகாப்பு இந்த கொட்டைப் பெட்டிக்குள்ளும், அவர்களின் நகைகளுக்குள்ளுமே அடங்கியிருந்தது என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கொட்டைப்பெட்டியினுள் இருக்கும் பணத்தில் உறைந்திருக்கும் அம்மாவின் வாசனை என்ற படிமம் அற்புதமானது. உண்மையில் கதையின் ஜீவனே இந்த வசனத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அம்மாவின் கொட்டைப்பெட்டி வெறும் பணம் சம்பந்தப்பட்டது அல்ல.

யாழ்ப்பண சமூகம் நீண்ட காலமாக மூடுண்ட சமூகமாக இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. இந்த மூடுண்ட சமூகத்திலும் பல்வேறுபட்ட ஒழுக்க மீறல்கள், ஆசாபாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை பெரும்பாலானவர்கள் வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில்லை. பணச்சடங்கு சிறுகதையில் நாகலிங்கம் மற்றும் குமாரசாமி என்ற இரண்டு முன்னாள் ஆசிரியர்கள். இந்நாள் கனவான்கள். ஆனால் "உசாரில்லாத சோணையன்" கந்தையாவின் மனுசி வள்ளியம்மையின் வாழ்க்கையில் நடந்தது என்ன என்பதை வாசகர்களே ஊகித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆசிரியரின் நோக்கம்.

எதிரியுடன் படுத்தவள் என்ற சிறுகதை இஸ்ரேல்-பலஸ்தீன இணையர்களின் காதல் திருமணத்தை மையமாக கொண்ட ஒன்று. ஆண் பெண் காதல் உறவு சாதி, மதம் தாண்டிய ஒன்றுதான் என்றாலும், சமூக யதார்த்தம் முற்றிலும் வேறாகவே இருக்கிறது. இத்தகைய கலப்பு மணம் செய்யும் தம்பதிகள் மட்டுமல்ல அவர்களின் வாரிசுகளும் மோசமாகப் பாதிக்கப்படும் நிகழ்வுகள் உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இச்சிறுகதையில் ஜெர்மன் தம்பதிகளிடம் யூதப்பெண்ணான அவீவா கூறும் "பத்து வருடங்களுக்கு முன்பென்றால் நீங்கள் மேலதிகமாக தந்த பணத்தை வாங்கியிருக்க மாட்டேன். முகம் கொடுத்து கதைத்தும் இருக்க மாட்டேன். ஜெர்மன் இனத்தை வெறுத்த காலம் அது. இன்று காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது.” எனும் வார்த்தைகள் மிகத் துயரமான யதார்த்தம். வரலாறு எப்போதுமே நீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ இருப்பதில்லை.

தற்போதைய வடமாகாணம் தனது ஆதியான வேர்களை மெல்ல மெல்ல உதறித் தள்ள தொடங்கிவிட்டது. 90s கிட்ஸ்என்று சொல்லப்படும் குழந்தைகளுடன் அந்த நினைவுகளும் தொன்மங்களும் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியுள்ளன என்பது மனத்தை உலுக்கும் சோகம். அந்த வகையில் இந்தத்தொகுப்பு தற்கால 2k கிட்ஸ் எனப்படும் இளையோருக்கு மிகவும் பயன் தரும். அக்கால யாழ்ப்பாண வாழ்வியலையும், அதனுள் ஊறி பின்னர் உலகம் முழுவதும் சுற்றிய ஒருவரின் பார்வையையும் அறிந்து கொள்வது நமது புரிதலையும், மரபையும் மேலும் விரிவாக்கும். அந்தவகையில் பணச்சடங்கு கட்டாயம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டிய ஒன்று.


No comments:

Post a Comment