சைவமுட்டை
பிரதி புதன்கிழமைதோறும்
ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன்.
வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும்
ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது
அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த
நிலையில், கோழிகள்
முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.
வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன்.