புனைவும் சுயமும்
- ரஞ்ஜனி சுப்ரமணியம் -
ஒரு இலக்கியப் படைப்பின் வாசிப்பானது, அனுபவம் அறிவு என்ற நிலைகளுக்கு அப்பால் காலம் கடந்தும் உணர்வுகளாக மனதில் சேமிக்கப்படும் போது அதிக பெறுமதி உடையதாகிறது.
அதே சமயம் அந்த உணர்வினைத் தரும் எழுத்தாளர் அதனை புனைவாக மட்டுமே கருதினாரா அல்லது அவரது சுயமும் அங்கு வெளிக்காட்டப்படுகிறதா என்ற சிந்தனை சிலருக்கு தோன்றக் கூடும். இந்த எண்ணம் தவறா சரியா என்பதற்கு அப்பால் யதார்த்தமானது என்றே கொள்ள வேண்டும். அக உலகு புற உலகு இரண்டும் இணைந்த சங்கமமே இலக்கியப் படைப்புகள்.
இதனால்தான் பாலியல் சார்ந்த புனைவுகளை வெளிப்படையாக எழுத பெண் எழுத்தாளர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பு பற்றிய சிந்தனையுடன் அவர் எப்படியான குணநலம் வாய்ந்தவர், எவ்வாறான சந்தர்ப்பத்தில் அல்லது என்ன மனநிலையில் இப்படைப்பினை எழுதியிருப்பார் என்ற சிந்தனையையும் சில சமயங்களில் சேர்ந்தே உருவாதல் தவிர்க்க முடியாதது.
இக் கேள்வியை எனக்குள் ஏற்படுத்தியதும் ஒரு எழுத்தாளர்தான். பேராசிரியரும் தமிழகத்தின் பிரபல எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்கள்.
'திரிவேணி சங்கமம்' என்ற பெயரில் தமிழகத்தின் காலச்சுவடு பதிப்பகத்தால் மறுபதிப்புச் செய்யப்பட்ட , எழுத்தாளர் ஆசி கந்தராஜாவின் குறுநாவல் தொகுதியின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
//பொதுவாக ஆசி கந்தராஜாவின் மொழியும் ஆற்றொழுக்குடன் கதை சொல்லும் முறையும் வாசிப்புக்குப் பெரிதும் உகந்தவையாக இருக்கின்றன. எல்லாக் கதைகளிலும் கதைசொல்லி பார்வையாளராகவே இருக்கிறார். வளமாக வாழும் ஈழத்தவர்மீது வெறுப்பும் துயருறும் ஈழத்தவர்மீது கரிசனமும் வெளிப்படுகின்றன. பெண்கள்மீது அத்தனை உயர்ந்த அபிப்பிராயம் இல்லை.//
'பெண்கள் மீது அத்தனை உயர்ந்த அபிப்பிராயம் இல்லை' என்ற அவரது கூற்று சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தொகுப்பின் சில கதைகளிலும் கதாசிரியரின் ஏனைய தொகுப்புகளிலும் வெளிப்படுத்தப்பட்ட பெண்களின் நடத்தைக் கோலங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது அவரது தனிப்பட்ட மதிப்பீடாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு தனி மனிதராக ஆசி கந்தராஜா பெண்கள் மேல் மரியாதை கொண்ட பண்பாளராகவே வெளியுலகில் அறியப் பட்டவர்.
இத்தொகுப்பின் முதல் கதையாகிய திரிவேணி சங்கமத்தில் முக்கிய பெண்பாத்திரம் ரொஸ்நாக். அமீரின் மனைவி. ஈரானியர்கள். பாரம்பரிய ஈரானிய கலாசாரத்தை சேர்ந்த பெண்ணாயினும், அமீரின் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் வாழும் காலத்தில் , மேற்குலக கலாசாரத்தின் வயப்பட்டு பாதை மாறியவளாக கணவன் அமீரின் சந்தேகத்திற்கு உள்ளாகிறாள்.
ஒரு ஆங்கிலேயனோடு பிறழ்உறவு கொண்டவளாகவும் காதலனின் ஆங்கிலேயச் சாயலில் தூய செம்பட்டை முடி கொண்ட குழந்தையை பெற்றுக் கொண்டவளாகவும் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டு அக்குழந்தையுடன் கைவிடப் படுகிறாள். அமீர் மற்றக் குழந்தைகளுடன் தனியாக ஈரான் திரும்புகிறான். இக் குறுநாவல், தொகுப்பில் உள்ளது. இதில் படைப்பாளரும் ரொஸ்நாக் மேல் சந்தேகம் கொண்டவராகவே தோன்றினார்.
ஆனால் ரொஸ்நாக் கலாசார மாற்றத்தினை விரும்பியது தவறாகாது என அவளது பெண்ணிய உரிமைகளுக்காகப் பரிந்து பேசிய சில வாசகரின் விருப்புக்கிணங்க அக்குறுநாவலின் தொடர்ச்சியாக படைப்பாசிரியர் மீண்டும் ஒரு கதை எழுதினார்.
'காதலொருவனைக் கைப்பிடித்து' எனும் அக் கதையின் மூலம் , பிறந்த குழந்தையின் DNA பரிசோதனைகள் மூலமாக தன்னைக் களங்கமில்லாதவளாக நிரூபித்துக் கொள்கிறாள் றொஸ்நாக்.
அமீரும் அவளும் வெவ்வேறு தேசங்களில் தங்கள் உண்மைக் காதலை மறக்க முடியாது வாழ்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க மற்றுமோர் சிறுகதை ஆசி கந்தராஜாவின் 'இந்துமதியாகிய நான்'.
இங்கு திருமணத்திற்கு முந்திய தனது ஆண்மைக் குறைபாட்டை மறைத்து மணம் முடிக்கும் ஆண் ஒருவன் தனது குறைபாடு வெளியலகிற்கு தெரியாதிருக்க வேண்டி , மனைவியை வேறொருவரின் விந்தணு மூலம் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வித்து தனது 'ஆண்மையை' நிரூபிக்கின்றான்.
ஆனால் தாம்பத்திய சுகத்தை அனுபவிக்காத அந்தப் பெண் உணர்ச்சி வேகத்தால் தன் வீட்டில் தங்கியிருந்த ஒருவரால் மீண்டும் கர்ப்பமாகிறாள். அந்தக் குழந்தை தனதல்ல என்பதை வெளியே சொல்ல முடியாத கணவன் தற்கொலை செய்து கொள்கிறான்.
இந்த மூன்று கதைகளிலும் குற்றம் செய்தவள் பெண்ணல்ல. ஆனால் தம்மைச் சார்ந்தவர்களால் அவர்களது சுயநலத்தால் அல்லது சந்தேகத்தால் பாதிப்புக்கு உள்ளாகிறாள். தவறாக விளங்கிக் கொள்ளப்படுகிறாள் .
ஆண்மைக் குறைபாட்டை தமக்கு அவமானமாகக் கருதி மறைக்க நினைக்கும் ஆண் , தனக்குரிய தண்டனையை தானே உருவாக்கிக் கொள்கிறான் என்பதாக கதையை முடித்ததில் இருந்து பெண்ணுக்கு சார்பாகவே படைப்பாளரது மனநிலை இருப்பதை உணரலாம். பெண்ணின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொள்பவராகவே தெரிகிறார்.
வேறு தொகுப்புகளில் இருக்கும் சில கதைகளிலும் பெண்ணுக்கு ஆதரவாகவே அவரது குரல் ஒலிக்கின்றது .
உ+ம் நரசிம்மம், துர்க்கா தாண்டவம், ஆண்குழந்தை
பிறழ் உறவுகளை ஆண் மேற்கொள்ளும் போது அதிகம் கவனத்தில் எடுக்காத சமூகம், பெண் தவறு விடும் போது பெருத்த ஆவேசம் கொள்கிறது. ஆனால் உணர்வுகள் இருபாலாருக்கும் பொதுவானவை. பெண்ணின் மேல் ஏன் பழி அதிகம் சுமத்தப்படுகிறது என ஆழமாக யோசித்தால் ஒரு உயிரைத் தாங்கி உருவாக்கக் கூடிய கர்ப்பப் பையும் கன்னிமைக்கு சான்றாகக் கொள்ளப்படும் ஒரு மென்சவ்வும் அவளுக்கு அமைந்திருப்பதே முக்கிய காரணமாகத் தோன்றுகிறது. ஆண் செய்த ஒழுக்கவீனங்களுக்கான தண்டனையை அவள் கருவில் சுமப்பதால் , அதுவே அவள் மேல் களங்கம் சுமத்தப் படுவதற்கும் காரணமாகிறது.
கருப்பை இல்லாவிட்டால் அவளது களங்கங்களும் ஆணைப் போலவே மறைக்கப்படலாம். அல்லது மறுக்கப்படலாம். தாய்மை பெண்ணுக்கு வரமா சாபமா என்ற கேள்வி இங்கு எழுகிறது.
ஆண் பெண் இருவரிடமும் ஆதிக்க மனப்பான்மை இருந்தாலும் உள்ளுறங்கும் உணர்வுகளின் சதவீதம் ஆண்களுக்கு மிக அதிகமானது. பெண் மேலாதிக்கம் ஆண் மேலாதிக்கம் இரண்டில் எது உலகில் அதிகளவு நிலவுகிறது என்ற கேள்விக்கான விடையை அவரவர் தமக்குள்ளே தேடிக் கொள்ளலாம். விடை நிதர்சனமானது . காரணம் படைப்பின் விநோதம். பெண்ணுடலின் மென்மையும் தாய்மையும்.
ஆனால் பெரும்பான்மை ஆண்கள் பாலின சமத்துவவாதிகளாகவும் பெண்களை மதிப்பவர்களாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொள்வது புறவுலக அபிப்பிராயங்களை வசியப்படுத்துவதற்காகவே. விதிவிலக்கான ஆண்கள் பலர் நிச்சயமாக உண்டு. அதைப் பெண்களின் உள்ளுணர்வுகள் அறியும்.
பெரும்பான்மை ஆண்களின் மனநிலையை உணர்ந்தமையே , பெண்கள் தமது அங்கீகாரத்திற்காக தனிப்பட்ட போராட்டங்களையும் அமைப்புகளையும் தோற்றுவிப்பதற்கு காரணமாக அமைகிறது.
ஆசி அவர்கள் கண்ணியமான நடவடிக்கைகள் கொண்டவர். ஆனால் அது தனது மரியாதையைக் காத்துக் கொள்வதற்கான நடைமுறையா அன்றி பெண்களின் சமத்துவத்தை கண்ணியத்தை சுயமரியாதையை மதிக்கிறாரா என்ற கேள்வி இப்போதும் தீர்க்கப் படாமலே இருக்கிறது.
நிறைவாக ஒரு விடயம் தெளிவாகிறது. ஆசி தீவிர பெண்ணியவாதி போல கோஷம் போடுவதில்லை. நடிப்பதில்லை. அவர் ஒரு யதார்த்தவாதி. இயற்கையில் உயிர்களின் இருப்பும் தொடர்ச்சியும், ஆணை வலிமையானவனாகப் படைத்திருக்கிறது என்பதால் ஆண் மேலாதிக்கம் இயல்பானது என்ற கருத்தினை நம்புபவர்.
அதையே நேர்மையாக எழுதுகிறார். அந்த நேர்மைதான் அவர் பெண்களுக்கு கொடுக்கும் மிகப் பெரிய மதிப்பு. பொய்மை நிறைந்த அதீத மரியாதையை பெண்கள் மேல் காட்டாமல் தன் கண்ணியத்தைக் காப்பதன் மூலம் மறைமுகமாக பெண்மையின் பெருமைகளுக்கு பங்கம் ஏற்படாது காக்கிறார். அதையே தன் கதைகளிலும் வெளிக்காட்டுகிறார் என்பதையே இதற்கான பதிலாகக் கொள்ள வேண்டி உள்ளது.
ஆசி கந்தராஜா அவர்களின் கதைகளை வாசிக்க இணைப்பு

No comments:
Post a Comment