Wednesday, 30 September 2026


ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு.


சோமநாதர் தாத்தா மிளகாய் நடுவார். விடிய நாலுமணிக்கு எழுந்து கிணற்றில் தண்ணீர் அள்ளி மிளகாய் கன்றுகளுக்கு ஊற்றுவார். மிளகாய் கன்றுகள் வளர்ந்து பத்து கணுக்கள் விடும்போது தாத்தா தண்ணீர் வார்ப்பதை நிறுத்தி விடுவார்.
இருவாரம் கழித்து கன்றுகள் நன்கு வாடியவுடன், மண்வெட்டியால் கொத்தி, பாத்திதட்டி தண்ணீர் பாச்சுவார். ஒருவாரத்தில் மிளகாய் கன்றுகள் பூக்கத் துவங்கும்.
வாடவிட்டு தண்ணி விட்டால் பூக்கும் என்பது அவரது வியாக்கியானம்.
இத்தகைய பட்டறிவைப்பாவித்து பாட்டியும் மல்லிகையில் இலைக் குருத்துக்கள் தோன்றியவுடன் வாடவிட்டுத் தண்ணி இறைப்பார். அடுத்த வாரமே பூ மொட்டுக்கள் அரும்ப ஆரம்பிக்கும்.
முன்னோர்கள் பாவித்த இத்தகைய விவசாய செய்முறைகளில் விஞ்ஞானத்தத்துவங்கள் பொதிந்திருந்ததை நான் பின்னாளில் புரிந்துகொண்டேன்.
தாவரங்களின் இலை மொட்டுக்களே (vegetative buds) பூ மொட்டுக்களாக (Generative, flower buds) மாறுகின்றன. தொடர்ச்சியாக வளரும் தாவரத்தின் நுனி- மற்றும் கணு- இலை மொட்டுக்கள் (vegetative buds), பூ மொட்டுக்களாக மாறவேண்டுமாயின் தாவர உடலுக்குள் ஒரு உடற் தொழில் (Physiological changes) மாற்றம் நடைபெற்று, தூண்டல் (induction) நடைபெறவேண்டும்.
சில தாவரங்களில் வறட்சி (Drought), தாவர உடலுக்குள் சில ஹோமோன்களின் உற்பத்தியை ஊக்குவித்து இலை மொட்டுக்கள் பூ மொட்டுக்களாக மாறத் தூண்டுகிறது. மிளகாய் இனங்கள், மல்லிகை இனங்கள், தோடை இனங்களுக்கு இது பொருந்தும்.
அப்பிள், பியேர்ஸ், பீச், பிளம்ஸ் போன்ற தாவரங்களுக்கு வறட்சிக்குப் பதிலாக குளிர், பூ மொட்டுக்கள் அரும்பத் தேவை. குறிப்பாக அப்பிள் பூப்பதற்கு உறைகுளிர் (Chill) தேவை. அதனால்த்தான் ஐரோப்பாவிலோ காஸ்மீரிலோ வளரும் அப்பிள் மரத்தை சென்னையிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ நட்டால் பூத்துக் காய்ப்பதில்லை.
- ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு