Saturday, 7 November 2026

பரஸ்பர உதவி, பகிர்ந்துண்ணும் பண்பாடு.

யாழ்ப்பாணத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்.

ஒரு நனவிடை தோய்தல்.

ஆசி கந்தராஜா. ஆஸ்திரேலியா.



தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது ஒளியல்ல, அந்த ஒளியைச் சுற்றி நின்ற எனது உறவுகளே. சமையலறையிலிருந்து காற்றோடு கலந்துவரும் உணவின் மணங்கள், புத்தாடையின் புதுமணம், அதிகாலையில் உடல் சிலிர்க்க எண்ணெய் தேய்த்துக் குளித்த அனுபவம் என, இளமைக்கால யாழ்ப்பாணத்து தீபாவளி நினைவுகள் என் மனதில் விரிகின்றன. காலம் பலவற்றைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டது. சில முகங்கள் நினைவுகளுக்குள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. சில குரல்கள் காலத்தின் இரைச்சலுக்குள் கரைந்து போய்விட்டன. ஆனாலும், என் மனத்தின் ஆழத்தில் எங்கோ ஒரு மூலையில், அந்த இளமைக்காலத் தீபாவளி இன்னும் அணையாத சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

இருளை அகற்றி ஒளியை ஏற்றுவது, தீபாவளியின் பொதுவான குறியீடாக இருக்கலாம். இருந்தாலும் எல்லா நிலங்களிலும் தீபாவளி ஒரே முகத்தோடு வருவதில்லை. இந்தியாவின் பல பகுதிகளில் தெருக்களை ஒளியால் அலங்கரித்து, வானத்தைப் பட்டாசுகளால் நிறைத்து, பெருவிழாவாகக் கொண்டாடப்படும் தீபாவளி, யாழ்ப்பாணத்தில் வேறொரு இயல்பைக் கொண்டிருக்கிறது. இங்கே தைப்பொங்கல் அல்லது சித்திரைப் புத்தாண்டைப் போல, தீபாவளி ஒரு சமய விழாவாகக் கருதப்படுவதில்லை. அது பெரும்பாலும் மகிழ்ச்சியின் பெயரால் அறியப்பட்டது. புத்தாடை அணிவது, பலகாரங்கள் உண்பது, உறவினர்களைச் சந்திப்பது, கோவிலுக்குச் செல்வது எனக் குடும்பங்களின் வழக்கங்களுக்கு ஏற்ப அதன் முகங்கள் மாறும்

நான் தற்போது வாழும் ஆஸ்திரேலியாவில் ஆங்கில மயப்படுத்தப்பட்ட, நவீன தீபாவளியைவிட ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய யாழ்ப்பாணத்துத் தீபாவளியே, நான் கொண்டாடி அனுபவித்த உண்மையான தீபாவளி என்பேன்.

ஐம்பது வருடங்களுக்கு முந்திய யாழ்ப்பாணத்துக் கிராமங்கள், இன்றுபோல் கான்கிரீட் வீடுகளாலும் நவீன வசதிகளாலும் நிரம்பியிருக்கவில்லை. மண் சுவர்கள், மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட திண்ணைகள், தென்னங்கீற்றுகளும் பனை ஓலைகளும் வேய்ந்த கூரைகள் என்று இயற்கையோடு ஒட்டிய வீடுகளே பல இடங்களிலும் காணப்பட்டன. அந்த வீடுகளுக்கு அழகு சேர்த்தது விலையுயர்ந்த வர்ணங்களோ அலங்காரப் பொருட்களோ அல்ல. அவற்றின் எளிமையும் அவற்றுக்குள் வாழ்ந்த மனிதர்களின் நெருக்கமும்தான்.

தீபாவளி வருவதற்கு சில வாரங்கள் இருக்கும்போதே வீடுகளில் அதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடும். வீட்டைச் சுத்தம் செய்வது, சுவர்களைப் புதுப்பிப்பது, முற்றத்தை ஒழுங்குபடுத்துவது என்று ஒவ்வொரு வீட்டிலும் பரபரப்பு குடியேறிவிடும். புற்று மண்ணைக் கொண்டுவந்து சுவர்களில் பூசிமெழுகி, வீட்டுக்கு ஒரு புதுப்பொலிவு கொடுப்பார்கள். மண் சுவரில் அந்தப் புதிய பூச்சு படிந்ததும், வீடே புதிதாகப் பிறந்ததுபோல்த் தோன்றும். அந்த ஒரு பிடி மண்ணே அன்று வீட்டுக்குப் பண்டிகைக் கோலம் கொடுத்தது.



புத்தாடை வாங்குவதற்கு இன்றுபோல் அவசரமாகக் கடைக்குச் சென்று றெடிமேட் ஆடைகளைத் தெரிவுசெய்ய முடிந்ததில்லை. துணிக்கடைகளில் துணிகளைத் தெரிவுசெய்து வாங்கி, தையல்காரரிடம் கொடுத்து, அளவெடுத்து, தைத்து முடிப்பதற்காகக் காத்திருக்க வேண்டும். கிராமத்துக்கு கிராமம் ஒருசில தையல்காரர்களே இருந்த காலமது. துணியைக் கொடுத்துவிட்டால் கதை முடிந்துவிடாது. தீபாவளி நெருங்க நெருங்க மனத்தில் ஓர் உறுத்தல் ஆரம்பமாகிவிடும். உடுப்பு தைத்தாகிவிட்டதா? எப்போது வந்து எடுத்துக்கொள்ளலாம்? இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? என்ற கேள்விகளோடு தையல்காரரின் கடைப் பக்கமாகப் போவதும் வருவதுமாக இருப்போம். அவர் இன்னும் தைக்கவில்லை என்று சொன்னால் முகத்தில் ஏமாற்றம் படரும். தைத்துவிட்டதாகச் சொன்னால் மனத்துக்குள் ஒரு சிறிய பண்டிகை அப்போதே தொடங்கிவிடும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்தப் புத்தாடைக்காகக் காத்திருந்த நாட்களில்தான் தீபாவளியின் உண்மையான மகிழ்ச்சி இருந்ததோ என்று தோன்றுகிறது.

தீபாவளியின் இன்னொரு முகம், பெரிசுகள் கள்ளுக் குடித்துப் போதை ஏற்றிக்கொள்வது. அன்று கள்ளுக் கொட்டில்கள் நிரம்பி வழியும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் பனங்கள்ளே புழக்கத்தில் இருந்தது. வசதி படைத்தவர்கள் சாராயம் வாங்குவார்கள். போதை தலைக்கேறியதும் பேச்சுத் தடிக்கும், வாய்த்தர்க்கம் வலுக்கும், சில இடங்களில் அது சண்டையாக வெடிக்கும். அந்தச் சண்டைகள் கொலையிலும் முடிந்துவிடும்.

ஆடு வெட்டுவதற்கும் இறைச்சி சமைத்து உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதற்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஒரு தனித்த இடமிருந்தது. அன்று ஆட்டிறைச்சி ‘பிரட்டல்’ கறியின் மணம் தவிர்க்க முடியாதது. ‘பிரட்டல்’ கறி, யாழ்பாணத்துக்கே சொந்தமானது.

தீபாவளி நெருங்கும்போதே சில வீடுகளில் ஆடு வாங்குவது பற்றிய பேச்சு ஆரம்பமாகிவிடும். வீட்டில் எத்தனைபேர்? வெளியூர்களிலிருந்து யார்யார் வரப்போகிறார்கள்? திருமணமான மகள் குடும்பத்தோடு வருவாளா? கொழும்பில் வேலை பார்க்கும் மகன் தீபாவளிக்கு ஊருக்கு வருவானா? இப்படியான கணக்குகள் எல்லாம் குடும்பத்தின் வசதிக்கும் உறவினர்களின் வருகைக்கும் ஏற்ப பெரியவர்களின் மனத்துக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆடு வாங்குவதற்கான வசதியுள்ள குடும்பங்கள் தங்களுக்கென ஓர் ஆட்டை வாங்குவார்கள். சில இடங்களில் சில குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து ஆடு வாங்கி, ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓர் இடத்திலோ வீட்டுத் தோட்டத்திலோ வெட்டி, இறைச்சியைப் பங்கிட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இப்பொழுது அது தடைசெய்யப்பட்டு கடைகளில் மட்டும் வாங்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தாலும் கிரமங்களில் பொழுது விடிவதற்கு முன்னர் பின்வளவில் ஆடுவெட்டிக் கூறாக்குவது நடைபெறுகிறது.

வெட்டிய ஆட்டின் பகுதிகள் பங்குபோடப்பட்டு எலும்பு, இறைச்சி, குடல், என பச்சைப் பனையோலையில் பொதிசெய்யப்படும். இதற்கு குடலை என்று பெயர். இவ்வாறாக ஒரு வீட்டின் பண்டிகை, பல வீடுகளின் பண்டிகையாக விரிந்துகொண்டது. இன்று ஒரு கடையில் இறைச்சியை வாங்கி, தேவைக்கேற்ப சிறு பொட்டலங்களாகப் பிரித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால், அன்று ஆடு வெட்டுவதென்பது வெறுமனே இறைச்சியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு செயல் மட்டுமல்ல. அதற்குப் பின்னால்  மனிதர்களின் ஒத்துழைப்பும் பரஸ்பர உதவியும் பகிர்ந்துண்ணும் பண்பாடும் இருந்தன. இது கிராமத்தில் ஒரு தனித்துவமான செயற்பாடும் கொண்டாட்டமும். இதன்மூலம் பல வீடுகளின் அடுப்புகளில் ஒரே நாளில் ஒரே வகையான உணவின் மணம் எழுந்தது.

ஆட்டிறைச்சி சமையலில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், யாழ்ப்பாணத்து வீடுகளில் சமைக்கப்படும் ஆட்டு இறைச்சிப் பிரட்டல் கறிக்கும், இரத்த வறைக்கும், குடல் கறிக்கும், பொரியலுக்கும், எலும்புக் குழம்புக்கும் அவற்றுக்கே உரிய தனித்துவமான இடம் இருந்தது. கறி அடுப்பில் கொதிக்கும்போது, அதன் மணம் சமையலறையைத் தாண்டி முற்றத்துக்கும் அடுத்த வீட்டுக்கும் பரவும். அந்த மணம் வெறுமனே பசியைத் தூண்டுவதில்லை. தீபாவளி என்ற உணர்வையும் மனத்துக்குள் எழுப்பும். சிறுவர்களுக்கு அது ஒரு விருந்தின் அறிகுறி. பெரியவர்களுக்கு அது விருந்தினர்கள் வரப்போகும் நாளின் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பம் ஒன்று கூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதற்குள் கலந்திருக்கும்.

யாழ்ப்பாணத்துத் தீபாவளியைப் பற்றிப் பேசும்போது, எல்லாக் குடும்பங்களும் ஆடு வெட்டின என்று பொதுமைப்படுத்த முடியாது. சில சைவ இந்துக் குடும்பங்கள் தீபாவளியன்று சைவ உணவுகளையே தயாரித்து உண்டன.

இன்று இந்தக் காட்சிகள் பல இடங்களில் மாறிவிட்டன. பலர் தமது ஊர்களைவிட்டு வேறு நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்றுவிட்டார்கள். ஒருகாலத்தில் ஒரே முற்றத்தில் கூடிக்கொண்டிருந்த உறவுகள், இன்று தொலைபேசித் திரைகளில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள். ஒன்றாகச் சேர்ந்து ஆடு வெட்டிய குடும்பங்கள், இப்போது கடைகளில் இறைச்சி வாங்கி, தத்தமது வசதிக்கேற்ப சமைத்துக்கொள்கின்றன. சில கிராமங்களில் இன்றும் பழைய வழக்கம் தொடர்கிறது. சில வீடுகளில் அது நினைவாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆனால், ஒரு வழக்கம் மறைந்துவிடுவதால் அதனோடு தொடர்புடைய நினைவுகளும் மறைந்துவிடுவதில்லை. பழைய தீபாவளியை நினைவுகூரும் ஒருவர், இறைச்சிக் கறியின் மணத்தை மட்டுமா நினைத்துப் பார்க்கிறார்? அதற்காக அதிகாலையில் எழுந்த தாயையும், அடுப்பருகே நின்று சமையலில் உதவிய சகோதரியையும், ஆடு வாங்குவதற்காகப் பணம் சேர்த்த உறவினரையும், உணவு பரிமாறியபோது அருகில் அமர்ந்திருந்த தந்தையையும் அல்லவா நினைத்துப் பார்க்கிறார்.

சில நினைவுகளுக்கு மணம் உண்டு. சில நினைவுகளுக்குச் சுவை உண்டு. இன்னும் சில நினைவுகளுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே முற்றத்தில் அமர்ந்திருந்த மனிதர்களின் முகங்கள் உண்டு. ஆடுவெட்டி, தீபாவளி என நான் நினைவு கூர்வதும் இவற்றைத்தான்.






No comments:

Post a Comment