''உருளைக் கிழங்கு''
சில உருளைக் கிழங்குகளுடன் என்முன் ஆஜரானாள் மனைவி! அவற்றில் சில பச்சை நிறம், சில முளைத்தது. இவற்றைச் சமைக்கலாமா என்பதே அவளது கேள்வி. அவளுக்குச் சொன்ன பதிலை, உங்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்.
பச்சை நிற உருளைக் கிழங்கு:
பச்சை நிறக் கிழங்கில் சொலனின் (Solanine) மற்றும் சாகோனின் (Chaconine) எனப்படும் இயற்கையான நச்சுப் பொருட்கள் அதிகரித்திருக்கலாம். இவை இயற்கையாகவே குறைந்த அளவில் உருளைக் கிழங்கில் இருப்பவை. அதிகரித்தால்த்தான் சிக்கல். பச்சை நிறம், வெளிச்சம்பட்டு குளோரோபில் உருவானதைக் குறிக்கிறது. இதனுடன் கிழங்கில் இயற்கையாக (சிறிதளவு) இருக்கும் சொலனின், சாகோனின் போன்ற நச்சுப் பொருள்கள் வெளிச்சம் படுவதால் அதிகரித்திருக்கலாம். சிறிய பச்சைப் பகுதி மட்டுமே இருந்தால், தோலைத் தடிமனாகச் சீவி அகற்றலாம். அதிகம் பச்சையாக இருந்தால் முழுவதுமாகத் தூக்கி எறிவது நல்லது.
முளைகள் கிழங்கிலுள்ள சத்தை உறிஞ்சியிருக்கும். சிறிய முளைகள் மட்டும் இருந்து, உருளைக்கிழங்கு உறுதியாகவும் சுருங்காமலும் இருந்தால், முளைகளை அகற்றியபின் சமைக்கலாம். அதிக முளைகள், சுருக்கம், மென்மை அல்லது பச்சை நிறம் இருந்தால் சாப்பிடுவது நல்லதல்ல.
சமைத்தால் நச்சு அழியுமா?
இல்லை. வேகவைத்தாலும், பொரித்தாலும், மைக்ரோவேவில் சமைத்தாலும் சொலனின் முழுமையாக அழிவதில்லை.
இதைச் சாப்பிட்டால் என்ன நடக்கும்? காசுக்கு வேண்டிய கிழங்கை எறிய மனமில்லாத மனைவியின் நியாயமான கேள்வி இது.
வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைவலி ஏற்படலாம். ஆனால் ஆளைக் கொல்லாது. இருப்பினும் உருளைக்கிழங்கு அதிகமாகப் பச்சையாகவோ, அதிகமாக முளைத்தோ இருந்தால் சாப்பிடாமல் எறிந்துவிடுவதே சிறந்தது.
குறிப்பு: உருளைக்கிழங்கை இருட்டான, குளிர்ச்சியான, காற்றோட்டமான இடத்தில் வைப்பது பச்சை நிறமாக மாறுவதையும் முளைப்பதையும் குறைக்கும்.


No comments:
Post a Comment