Tuesday, 6 September 2022

 

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

அ. ராமசாமி

 

புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால்நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தவிர்க்க முடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது. இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்பு பற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டுக்குள் ஏற்பட்ட போர்களாலும் கடும்பஞ்சங்களாலும் பெருந்தொற்று நோய்களாலும் நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாழ்க்கையைக் குறித்த சொல்லாக ‘அலைந்துழல்வு’ – Diaspora – என்ற சொல் உருவாகி நிலைபெற்றதின் பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப்போர்களைச் சந்தித்த காரணிகள் இருந்தன. அதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் உலகெங்கும் உருவாக்கிய காலனிய வடிவத்தால் ஒரு நாட்டின் மனிதர்கள் இன்னொரு நாட்டிற்குள் குடியமர்த்தப்பட்ட பெரும் நிகழ்வுகளும் நடந்தன. அப்பெருநிகழ்வுகளைக் குறிக்கும் சொல்லாடலாகவும் ‘அலைந்துழல்வு’ இருக்கிறது. இந்திய, இலங்கைத் தமிழ் மனிதர்கள் பிரிட்டானியக் காலனியவாதிகளாலும் ஒல்லாந்து காலனியாட்சியாளர்களாலும் வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்க்கப்பட்டு உடல் உழைப்புத் தொழிலாளிகளாக ஆக்கப்பட்ட வரலாறும் நிகழ்வுகளும் அவ்வப்போது புனைகதைகளாக ஆக்கப்பட்டுள்ளன. ப.சிங்காரம், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களின் நாவல்களும் ஜெயந்திசங்கர் போன்றவர்களின் சிறுகதைகளும் அப்படியான வகைப்பாட்டில் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியில் அண்மையில் வந்த இரண்டு நாவல்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதப்பெற்றுள்ளன.

Thursday, 11 August 2022

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும்.

'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வை. 

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும்.  

இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம்,  ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத்  தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

Monday, 14 March 2022

புனைகதை வெளியில் புதிய எல்லையைத்  தொடும்

பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு

 


றிவியலுடன் உலகளாவிய தனதனுபவங்களையும் கலந்து வித்தியாசமான தளங்களில் நின்று புதிய புனைவு மொழியிலும், உத்திகளிலும் கதை சொன்ன முறைமையில் இன்றைய எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவராக முதற் சிலருள் வைத்துப் போற்றத்தக்கவராக ஆசி கந்தராஜா திகழ்கிறார். பூங்கனியியல், உயிரியல்  தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர், அறிவியல் அறிஞர், விவசாயத்துறை ஆலோசகர், அனுபவமிக்க மின்னியல் ஊடகவியலாளர், எழுத்தாளர் என ஆசி கந்தராஜா பல்துறைகளிலும் பிரகாசிப்பினும் அவரை ஜனரஞ்சகப் படுத்தியது எழுத்தாளர் எனும் அவரது பேராளுமை தான் எனத் துணிந்து கூறலாம்.

எழுத்தாளர் எனும் வகையில் கதைஞராக, புனைவாளராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக ஆசி செயலியற்றி வருகிறார். அறிவியலை குறிப்பாக பூங்கனியியலை முன்னிறுத்தி ஆசி புனையும் கட்டுரைகளில் அறிவியல் சார்ந்த தகவல்கள் அவருடைய சித்திரிப்பு ஆற்றலுடன் செம்பாதியாய் கலந்திருக்கும். ஆனால் அவரது புனைவுகளிலோ ஆசிரியரின் திறனானது அவரது சித்திரிப்பு ஆற்றலுக்கு அப்பாலும் பல தளங்களிலும் வியாபித்து மானுட உறவு நிலைகளையும் உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்துவதாக அமையும்.

புனைகதைஞராய் நின்று ஆசி படைத்த இலக்கியங்கள் சர்வ தேசிய மாற்றங்களின் போக்கிற்கேற்ப இயைந்திருந்து அவரை ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளராக சிறுகதையைப் புத்தாக்கம் செய்யும் பிதாமகர்களில் ஒருவராக நிலைநிறுத்தின எனலாம். அந்த வகையில் 'பாவனை பேசலின்றி' (2000) உயரப் பறக்கும் காகங்கள் (2003) போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் அதில் உள்ளடங்கி யிருந்த கதைகளும் இலக்கியவெளியில் பெரிதும் பேசப்படலாயின. இந்த இரு நூல்களைத் தவிர 2018 இல் ஆசியின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பானது 'கள்ளக்கணக்கு' எனும் பெயரில் அறுவடையானது. 'பாவனை பேசலின்றி' சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான இலங்கை அரசின் இலக்கிய விருதினைத் தனதாக்கியிருந்தமையும், 'கள்ளக்கணக்கு' நூலானது தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது என இரட்டை விருதுகளைப் பெற்றிருந்தமையும் இவரது புனைவாற்றலுக்குக் கிடைத்த பேரங்கீகாரங்கள் எனக் கொள்ளலாம். அறிவியல் சார் தகவல்களையும் புனைவின் கூறுகளையும் கலந்து  புதுவித மொழிநடையுடனும் அங்கதச் சுவையுடனும் தன் கதைகளை அவர் நகர்த்தும் பாங்கு அவருக்கேயுரியது. இப் பண்பினாலேயே பெரும்பாலான வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அ.முத்துலிங்கம் அவர்களுடன் ஆசி பொருத்திப் பார்க்கப் படுகிறார்.

ஆசியின் அல்புனைவுகள் அறிவியல் சஞ்சிகைகளுக்கு நிகரானவை. விஞ்ஞானியான போதிலும் வித்துவத்துடன் அவற்றினைப் புனையாது விவசாயஞ் செய்பவர்களாலும் அறிவியல் பிரஞ்ஞை அற்றவர்களாலும் புரிந்துணரத்தக்க வகையில் தனது கட்டுரைகளை அவர் வடிவமைத்திருப்பார். நீண்ட காலப் பயிர்களை குறுகிய காலத்துள் மகசூல் தரவைப்பது அயன மண்டலப் பயிர்களை  அவுஸ்திரேலியாவிலும் பயிரிட்டு அறுவடை காண்பது ஒட்டு வைத்தும் பதிவைத்தும் பயிர்களில் மிகுந்த பலனைக் கொள்வது என பயிர்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளையும், பூங்கனியியல் அபிவிருத்தியினையும் இலக்கியமாக்கி

Sunday, 30 January 2022

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும்.

'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வைகள்.

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -

  


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும்.  இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம்ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத்  தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால்குறையாக  உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.

அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

சிரிய அதிபரின் ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டங்கள், பின்னாளில் ஒரே மதத்தின் உட்பிரிவுகளான சுனி, ஷியா முஸ்லிம்களின் முரணாகவும், தீவிரவாதிகளின் பட்டறையாகவும் உருமாறின. ஆதிக்க நாடுகளின் அனுசரணையுடன் பெரும் உள்நாட்டுப் போராக தோற்றம் பெற்றது. கணக்கற்ற உயிரிழப்புகளும், அண்டை நாடுகளுக்கான அகதிகள் இடம்பெயர்வுமாக பல லட்சங்கள் தாண்டிய அவலமும் அண்மைய வரலாறு. பிஜியின் கரும்புத் தோட்டங்களுக்கும், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கும் இந்தியாவிலிருந்து வேலைக்காக அழைத்து  வரப்பட்ட இந்திய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களும், ஒடுக்குமுறைகளும் சில நூற்றாண்டுகள் கடந்த வரலாறு. இலங்கையின் இன ஒடுக்குமுறைகளும், இறுதிப்போரும், அகதி வாழ்வும் எமது தாயக வரலாறு. இவையெல்லாம் ஆசியின் படைப்புகள் சிலவற்றின் கதைக்களங்கள். இப்படைப்புகளின் இறுதியில் பல கேள்விகள் உருவாவதும், பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுகளை வாசகரிடம் தோற்றுவித்தலும் அறிவுசார் இலக்கியரசனைக்கு  உரியது. இதில் 'தலைமுறை தாண்டிய காயங்கள்' மனதில் பதிந்ததும் அல்லாமல் சில பதற்றங்களையும் ஏற்படுத்தியது. காரணம் உள்ளார்ந்த உணர்வு நிலைகளின் ஒத்திசைவும் சில முரண்களும். தொடரும் உரையாடல் இச்சிறுகதையின் மனதுக்கு வலி தரும் அழுத்தமான பகுதி.

Saturday, 22 January 2022


கோளமயமாதல்

ஆசி கந்தராஜா

ளமைக்கால இலக்கிய நண்பன் ஒருவனை, பல்கலைக்கழக பணி நிமித்தமாக நான் கிழக்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்றிருந்த பொழுது சந்தித்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பணிபுரிவதாக அவன் சொன்னான். கல்லூரி நாட்களில் அவனும் நானும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்தோம். பிற மொழி இலக்கியங்களை அவன் நிறையவே வாசிப்பான். மரபுகள் மீறப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது அவன் கொள்கை. இது சம்பந்தமாக பலதடவைகள் அவன் கல்லூரி நண்பர்களுடன் முரண்பட நேர்ந்ததும் உண்டு.

இலங்கையில் நடந்த இனக்கலவரம், அதைத் தொடர்ந்த போராட்டம், புலம் பெயரும் நிர்ப்பந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் நாம் இருவரும்  வெவ்வேறு திசைகளில் பயணித்து விட்டோம். இப்போது இருண்ட கண்டத்தின் நாடொன்றிலே எதிர்பாராத சந்திப்பு.

பிறந்த மண்ணைத் தொலைத்துப் புதிய வாழ்க்கை தேடும் எலியோட்டத்திலே, இலக்கியச் சிந்தனைகளைத் தான் தொலைத்துவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டான். அங்கு நிற்கும்வரை இரவுச் சாப்பாட்டுக்கு தனது வீட்டுக்கு வருமாறும் அன்புக் கட்டளையிட்டான்.

ஹோட்டல் வளவுக்குள்ளேயே நண்பனுக்கு வீடொன்றை ஒதுக்கியிருந்தார்கள். நண்பனின் வீட்டில் பீட்டர் என்ற சுதேசி இளைஞன் குடும்பத்தில் ஒருவனாக வளையவந்தான். அவனே நண்பனின் அலுவலக உதவியாள், சாரதி, வீட்டு வேலைக்காரன் எனச் சகலகலா ஊழியன். இட்லி, தோசை, சப்பாத்தி முதல்கொண்டு இந்திய உணவுவகைகளை சுவையாகச் சமைப்பான் என நண்பனின் மனைவி சொன்னார். விசுவாசம் என்பதின் அர்த்தத்தை அவனிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பீட்டருக்கு நற்சான்றிதழ் வழங்கினான் என் நண்பன்.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் பலதும் பத்தும் பேசிக் கொண்டிருந்தோம். ஆபிரிக்க இலக்கியம், எழுத்தாளர்கள், அங்கு வாழும் 'ட்ரைபல்' இனங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கலந்துரையாடும்போது பீட்டர் பற்றி பேச்சுத்திரும்பியது.

Sunday, 19 December 2021

ஆசி கந்தராஜாவின் 'ஓர் அகதியின் பேர்ளின் வாசல்' வரலாற்றுத் தொடர் நவீனத்தையொட்டிய பின்னுரை...!

 

ஒரு பசுக்கன்றுக்கும் தெரிந்த தேற்றம்

- செல்லையா சுப்ரமணியம்-

-1-

பாடசாலையில் நான் படித்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில்தான் தூயகணிதம் அறிமுகம். எட்டாம் வகுப்புவரை எண்கணிதம்தான். தூயகணிதத்தில் இரண்டு பிரிவுகள். அட்சரகணிதம், கேத்திரகணிதம். இதில் கேத்திரகணிதம்தான் கொஞ்சம் சில்லெடுப்பு. பைதகரஸ் அது இது என்று பல தேற்றங்கள் உண்டு. ஏற்கனவே நிறுவப்பட்ட இவற்றை ஆதார சுருதியாய்க் கொண்டு கேட்கப்படும் கணக்குகளை நிறுவவேண்டும். இந்தத் தேற்றங்களை எமது மண்டையில் ஏற்ற எல்லா ஆசிரியர்களாலும் முடிவதில்லை. ஒரு ஆசிரியர் மட்டும் உபகதை சொல்லி வாழ்நாள் முழுக்க மறக்காதபடி உருவேற்றிவிடுவார்.

ஒரு தேற்றம் - முக்கோணியொன்றின் இரண்டு பக்கங்களை ஒன்று சேர்த்தால் அதன் நீளம் அடுத்த பக்கத்தைவிடக் கூடியது.

இதை ஒரு பசுக்கன்றுகூட நிறுவிவிடும். பசுவை அந்த முக்கோணத்தின் ஒரு மூலைப்புள்ளியிலும் கன்றை இன்னொரு மூலைப்புள்ளியிலும் கொண்டுபோய் விட்டால் கன்று தூரம் குறைந்த வழியால்தான் தாயை நோக்கியோடும். முக்கோணியின் இரண்டு பக்கங்களை சேர்க்கும் நீளத்தைவிட மற்றப்பக்க நீளம் குறைவென்று அந்தக் கண்ணுக்குட்டிக்கே புரிகின்றபோது உங்களுக்குத் தெரியாதா என்ன? என்று அந்த ஆசிரியர் சொன்னபோது, அட இவ்வளவுதானா என்று கேத்திரகணிதம் லேசானது.

Sunday, 12 December 2021

12. 12. 2021 உதயன் சஞ்சீவியில்

பணச்சடங்கு:

யாழ்மண்வாசம் வீசும் அந்நிய நிலங்கள்

-அலைமகன்-



ஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசி கந்தராஜா அவர்கள் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். புனைவுக்கட்டுரைகள், சிறுகதை, குறுநாவல் என பல பரிமாணங்களில் படைப்புக்களை தந்துள்ள அவரின் சமீபத்திய வரவு பணச்சடங்கு எனும் சிறுகதைத் தொகுப்பு. நூலாசிரியர் உலகம் சுற்றியவர். விவசாய நிபுணராக உலகின் பல பல்கலைக்கழகங்களில், பல்வேறுபட்ட கலாச்சார வெளிகளில் மனிதர்களை சந்திக்கும், அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். தான்கண்டறிந்த, அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக புனைவுகளாகவும், புனைவுக்கட்டுரைகளாகவும் கொடுக்கும் இலக்கிய தாகம் நிறைந்தவர்.

பொதுவாகவே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய அவதானம் ஒன்றுண்டு. அதாவது தங்களின் தாயகத்து வாழ்க்கையைப்பற்றி தங்கள் படைப்புக்களில் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் அது. இந்த நனவிடைதோய்தல் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தங்களின் இளம் பருவத்தை வடிவமைத்த  நினைவுகளே ஒரு மனிதனில் ஆழ்மன உணர்வுகளில் அவனது வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. அந்த நினைவுகளை இலக்கியத்தில் வடிக்க முடியாதவர்கள் அல்லது அந்த நினைவுகளை வாழ்க்கைப்போட்டியின் அவசரத்தில் தொலைத்துவிட்டவர்கள் தூரதிஷ்டசாலிகள்.

Friday, 3 December 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (3)

ஆசி கந்தராஜா



3. விலாங்கு மீன்கள்

ஸ்திரேலியாவில் வாழும் பல்லின சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது அபொர்ஜினி சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், என்பன இன்றும் மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளன. இதனால் இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகமாவதால், பொலீசாரால் கைதுசெய்யப்படும் வீதமும், ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. விகிதாசார எண்ணிக்கையின்படி சிறையிலிருப்போரில் அதிகமானோர் அபொர்ஜினிஸ் மக்களே என புள்ளி விபரம் சொல்கிறது. சிறையில் இவர்கள் காவலர்களால் பாரபட்சமாக நடத்தப்படுவதும், சிறை மரணங்களும் இன்றும் நடக்கின்றன.

காலம் எப்பொழுதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பத் துவங்கினார்கள். வெள்ளையர்களின் அரசுக்கு எதிராக இவர்களின் எதிர்ப்புக்கள் படிப்படியாக வலுவடைய, பூர்வ குடிமக்களுக்கு தாங்கள் செய்த அநீதிகளை, மெல்ல மெல்ல ஒத்துக்கொள்ளத் துவங்கினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில், மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிமக்களுக்கு, இன்றுவரை முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் 1990ம் ஆண்டு 'பூர்வீக காணி உரிமைச் சட்டம்'  வெள்ளையர்களின் அரசால் இயற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2008ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் கெவின்-ரட், அபொர்ஜினி ஆதிவாசிகளிடமிருந்து, பலவந்தமாக பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். காலம் கடந்து கேட்கப்பட்ட இந்த மன்னிப்பை, அபொர்ஜினிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய சமயம் பார்த்து கொக்கி போட்டார், சுந்தரமூர்த்தி.

Friday, 26 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (2)

ஆசி கந்தராஜா


2. வெள்ளையர்கள் பழக்கிய குடி.

அன்று முழு நிலவு. அதுவும் சித்திரைப் பூரணை!

அன்றைய தினத்தை தங்களின் மூதாதையர்களின் தினமாக ஆட்டம் பாட்டத்துடன் அநுஷ்டித்தார்கள். பகல் முழுவதும் ஒருவித போதை மயக்கத்திலும் உறக்கத்திலும் இருந்தவர்கள், மாலையானதும் 'யுக்கலிப்ரஸ்' மரத்தின் கீழ் ஒன்று கூடினார்கள். கருக்கல் நேரத்தில், பைன் மர ஊசி இலைகளையும், யுக்கலிப்ரஸ் மர இலைகளையும் எரித்துப் புகை போட்டு, பாட்டுப் பாடினார்கள். வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் கொழுத்த 'கங்காரு'க்களை தோளில் சுமந்து வந்தார்கள். அவற்றைத் தோலுடன் நெருப்பில் கருக்கி, யுக்கலிப்ரஸ் இலைகளை எரித்த புகையில் பதப்படுத்தி, மூதாதையர்களுக்குப் படைத்தார்கள். அதன் பின்னர் விருந்தும் ஆட்டமும் துவங்கியது. இப்படியான ஒரு சூழலில், அபொர்ஜினி குழுத் தலைவரை, மாணவர்கள் சுந்தரமூர்த்திக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது இயல்பாகவே அபொர்ஜினி மக்களின் வரலாறு பற்றிப் பேச்சு வந்தது.

'தன்னுடைய பெயர் அக்காமா (Akama), திமிங்கிலத்தின் பலம் கொண்டவன் என்பது அதன் பொருள்' என்று, தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் ஒரு பழுத்த அநுபவசாலி என்பது பேச்சில் தெரிந்தது. 'பாம்' மர இலை ஒன்றால் காத்து விசிறியபடி, தங்களது வரலாற்றில் நடந்த சோக அத்தியாயங்களை, தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் சொல்லத் துவங்கினார்.



1770ம் ஆண்டு கப்டன் குக் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர்களின் வருகை (1788), ஆதிவாசிகளின் வாழக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. முதலில் குற்றவாளிகளும் அவர்களின் காவலர்களும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்டார்கள். பின்னர் பிரித்தானியாவில் வாழ லாயக்கற்ற காவாலிகளும், 'கடைப்புலி'களும் வந்தார்கள். வரும்போது அவர்கள் 'சும்மா' வரவில்லை! விஷக் காச்சல், அம்மை போன்ற நோய்களையும் கொண்டு வந்தார்கள். அதுவரை ஆதிவாசிகளிடம் இல்லாத பால்வினை நோய்களை, பரப்பியவர்களும் வெள்ளையர்களே. காலப் போக்கில் நாடு விருத்தியடைய, ஐரோப்பிய வெள்ளையர்களின் குடியேற்றம் படிப்படியாக ஆரம்பமாகியது.