Sunday, 12 December 2021

12. 12. 2021 உதயன் சஞ்சீவியில்

பணச்சடங்கு:

யாழ்மண்வாசம் வீசும் அந்நிய நிலங்கள்

-அலைமகன்-



ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசி கந்தராஜா அவர்கள் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். புனைவுக்கட்டுரைகள், சிறுகதை, குறுநாவல் என பல பரிமாணங்களில் படைப்புக்களை தந்துள்ள அவரின் சமீபத்திய வரவு பணச்சடங்கு எனும் சிறுகதைத் தொகுப்பு. நூலாசிரியர் உலகம் சுற்றியவர். விவசாய நிபுணராக உலகின் பல பல்கலைக்கழகங்களில், பல்வேறுபட்ட கலாச்சார வெளிகளில் மனிதர்களை சந்திக்கும், அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். தான்கண்டறிந்த, அனுபவங்களை மிகவும் சுவாரசியமாக புனைவுகளாகவும், புனைவுக்கட்டுரைகளாகவும் கொடுக்கும் இலக்கிய தாகம் நிறைந்தவர்.

பொதுவாகவே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய அவதானம் ஒன்றுண்டு. அதாவது தங்களின் தாயகத்து வாழ்க்கையைப்பற்றி தங்கள் படைப்புக்களில் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் அது. இந்த நனவிடைதோய்தல் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தங்களின் இளம் பருவத்தை வடிவமைத்த  நினைவுகளே ஒரு மனிதனில் ஆழ்மன உணர்வுகளில் அவனது வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. அந்த நினைவுகளை இலக்கியத்தில் வடிக்க முடியாதவர்கள் அல்லது அந்த நினைவுகளை வாழ்க்கைப்போட்டியின் அவசரத்தில் தொலைத்துவிட்டவர்கள் தூரதிஷ்டசாலிகள்.

Friday, 3 December 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (3)

ஆசி கந்தராஜா



3. விலாங்கு மீன்கள்

ஆஸ்திரேலியாவில் வாழும் பல்லின சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது அபொர்ஜினி சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், என்பன இன்றும் மிகவும் கீழ் நிலையிலேயே உள்ளன. இதனால் இளைஞர்கள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகமாவதால், பொலீசாரால் கைதுசெய்யப்படும் வீதமும், ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. விகிதாசார எண்ணிக்கையின்படி சிறையிலிருப்போரில் அதிகமானோர் அபொர்ஜினிஸ் மக்களே என புள்ளி விபரம் சொல்கிறது. சிறையில் இவர்கள் காவலர்களால் பாரபட்சமாக நடத்தப்படுவதும், சிறை மரணங்களும் இன்றும் நடக்கின்றன.

காலம் எப்பொழுதும் எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக குரலெழுப்பத் துவங்கினார்கள். வெள்ளையர்களின் அரசுக்கு எதிராக இவர்களின் எதிர்ப்புக்கள் படிப்படியாக வலுவடைய, பூர்வ குடிமக்களுக்கு தாங்கள் செய்த அநீதிகளை, மெல்ல மெல்ல ஒத்துக்கொள்ளத் துவங்கினார்கள். இருந்தாலும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில், மண்ணின் மைந்தர்களான பூர்வகுடிமக்களுக்கு, இன்றுவரை முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் 1990ம் ஆண்டு 'பூர்வீக காணி உரிமைச் சட்டம்'  வெள்ளையர்களின் அரசால் இயற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2008ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் கெவின்-ரட், அபொர்ஜினி ஆதிவாசிகளிடமிருந்து, பலவந்தமாக பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, பாராளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். காலம் கடந்து கேட்கப்பட்ட இந்த மன்னிப்பை, அபொர்ஜினிகள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய சமயம் பார்த்து கொக்கி போட்டார், சுந்தரமூர்த்தி.

Friday, 26 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (2)

ஆசி கந்தராஜா


2. வெள்ளையர்கள் பழக்கிய குடி.

அன்று முழு நிலவு. அதுவும் சித்திரைப் பூரணை!

அன்றைய தினத்தை தங்களின் மூதாதையர்களின் தினமாக ஆட்டம் பாட்டத்துடன் அநுஷ்டித்தார்கள். பகல் முழுவதும் ஒருவித போதை மயக்கத்திலும் உறக்கத்திலும் இருந்தவர்கள், மாலையானதும் 'யுக்கலிப்ரஸ்' மரத்தின் கீழ் ஒன்று கூடினார்கள். கருக்கல் நேரத்தில், பைன் மர ஊசி இலைகளையும், யுக்கலிப்ரஸ் மர இலைகளையும் எரித்துப் புகை போட்டு, பாட்டுப் பாடினார்கள். வேட்டைக்குச் சென்ற இளைஞர்கள் கொழுத்த 'கங்காரு'க்களை தோளில் சுமந்து வந்தார்கள். அவற்றைத் தோலுடன் நெருப்பில் கருக்கி, யுக்கலிப்ரஸ் இலைகளை எரித்த புகையில் பதப்படுத்தி, மூதாதையர்களுக்குப் படைத்தார்கள். அதன் பின்னர் விருந்தும் ஆட்டமும் துவங்கியது. இப்படியான ஒரு சூழலில், அபொர்ஜினி குழுத் தலைவரை, மாணவர்கள் சுந்தரமூர்த்திக்கு அறிமுகம் செய்தார்கள். அப்போது இயல்பாகவே அபொர்ஜினி மக்களின் வரலாறு பற்றிப் பேச்சு வந்தது.

'தன்னுடைய பெயர் அக்காமா (Akama), திமிங்கிலத்தின் பலம் கொண்டவன் என்பது அதன் பொருள்' என்று, தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் ஒரு பழுத்த அநுபவசாலி என்பது பேச்சில் தெரிந்தது. 'பாம்' மர இலை ஒன்றால் காத்து விசிறியபடி, தங்களது வரலாற்றில் நடந்த சோக அத்தியாயங்களை, தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் சொல்லத் துவங்கினார்.



1770ம் ஆண்டு கப்டன் குக் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர்களின் வருகை (1788), ஆதிவாசிகளின் வாழக்கையை முற்றிலும் புரட்டிப் போட்டது. முதலில் குற்றவாளிகளும் அவர்களின் காவலர்களும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பப்பட்டார்கள். பின்னர் பிரித்தானியாவில் வாழ லாயக்கற்ற காவாலிகளும், 'கடைப்புலி'களும் வந்தார்கள். வரும்போது அவர்கள் 'சும்மா' வரவில்லை! விஷக் காச்சல், அம்மை போன்ற நோய்களையும் கொண்டு வந்தார்கள். அதுவரை ஆதிவாசிகளிடம் இல்லாத பால்வினை நோய்களை, பரப்பியவர்களும் வெள்ளையர்களே. காலப் போக்கில் நாடு விருத்தியடைய, ஐரோப்பிய வெள்ளையர்களின் குடியேற்றம் படிப்படியாக ஆரம்பமாகியது.

Friday, 19 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

'களவாடப்பட்ட குழந்தைகள்' (1)

ஆசி கந்தராஜா

 

1. தப்புத்தாளங்கள்

அந்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. அதற்கும் மேலாக அந்த முடிவைத் தீர்மானித்தவர்களில் அவரும் ஒருவர் என்பது அவரது மனதைச் சுட்டெரித்தது. மற்றவர்களுடன் ஒத்துப் போவதென்றால், போலிகளுக்குத் துணை போவதுதானோ?

'அபொர்ஜினி' என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிவாசிகளுக்கு அரச நிறுவனங்கள், மற்றும் கல்விச் சாலைகளில் பல சலுகைகள் உண்டு. ஆனால் இந்த உதவிகள் உண்மையான ஆதிவாசிகளைச் சென்றடைவதில்லை என்ற கசப்பான உண்மை, பலருக்குத் தெரிவதில்லை. இதற்கான 'சட்டப் புழைவாய்'களைப் புரிந்து கொள்ள, சுந்தரமூர்த்திக்கு அதிக காலம் செல்லவில்லை. சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இனக்கலவரம் என்ற பெயரால் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட பின் ஆஸ்திரேலியா வந்தவர் சுந்தரமூர்த்தி. அந்த வேதனை இன்றும் அவரை வாட்டுவதால், ஆதிவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அவரால் பொறுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பது பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. சுமார் நாற்பத்தையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வந்திருக்கலாமென்றும் சொல்லப்படுகிறது. கடுமையான வறட்சியினால் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, பிழைப்புக்காக புதிய பூமி தேடி, இந்தோனேசியத் தீவுகளின் வழியாக இவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தவர்கள் என்ற கருத்தும் உண்டு. 1974ம் ஆண்டு, நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 'முங்கு குளத்தருகில்' (Mungo Lake) கண்டெடுக்கப்பட்ட மனிதச் சுவடுகளின் மரபணுக்கள், இந்திய பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Friday, 12 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (3)

ஆசி கந்தராஜா



3: இந்திய மைனாக்கள்

வார்த்தை தவறாது, மாநாடு முடிந்த அடுத்த நாள் காலை பத்து மணிக்கே சுந்தரமூர்த்தியைக் கூட்டிப்போக வந்திருந்தான் சேகர். தென் இந்தியாவில் இருந்து கரும்புத் தோட்ட வேலைக்கு வந்த குடும்பத்தின் வாரிசான சேகரிடம் சொந்தமாக காரை எதிர்பார்க்க முடியாது. பிஜித் தீவுகளில் றெயில் வண்டிகளும் கிடையாது. எனவே வாடகைக் கார் ஒன்றை அமர்த்திக் கொண்டு அவனது வீட்டுக்குச் சென்றார்கள்.

சேகரின் பெற்றோர்கள் தலைநகர் சூவாவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நௌசோறி என்ற இடத்தில் வசிக்கிறார்கள். அங்குதான் சர்வதேச விமான நிலையம் உள்ளது. போகும் வழியில் மிகப்பெரிய சர்க்கரை ஆலை ஓன்று இயங்காமல் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தார். அது பற்றி அவனிடம் கேட்டார்.

என்னுடைய மூதாதையர்களின் பிழைப்பு இந்த ஆலையை நம்பியே இருந்தது. 1882ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆலை 1959இல் மூடுவிழா கண்டது. எல்லாம் தெரிந்தவர்களாக, தங்களைத் தாங்களே எண்ணிக் கொண்ட பிரித்தானியர்கள், பிஜித்தீவில் செய்த தப்புத்தாளங்களில் இதுவும் ஒன்று!

அதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.


பிஜியின் பாவு தீவைச் சேர்ந்த,  ‘சேரு-எபெனிசா-சாக்கோபாவு’ என்பவன் பிஜியில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடிகளை தன்னுடைய கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, பிஜியின் அரசனாக தன்னை அறிவித்தான். 1874 ஆம் ஆண்டு பிஜி பிரித்தானியரின் கட்டுப்ப்பாட்டில் வரும் வரை இவனே பிஜியை ஆண்டு வந்தான். பிஜியைத் தமது குடியேற்ற நாடாக அறிவித்த பிரித்தானியர், பிஜியின் சர்க்கரைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து வேலையாட்களைத் தருவித்தனர். அப்போது இளைஞனாக வந்தவர்தான் என்னுடைய முப்பாட்டன். அவரும் என்னுடைய தாத்தாவும் 1959ம் ஆண்டு, இந்த ஆலை மூடப்படும்வரை ஆலையைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டத்திலேயே அடிமைகளாக உழைத்தார்கள்.

இதைச் சொல்லும்போது சேகர் சற்று உணர்ச்சிவசப் பட்டான்.

Friday, 5 November 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (2)

ஆசி கந்தராஜா


2. இனக் குரோதம்

மாநாட்டுக்கு வந்திருந்தவர்களுள் பெரும்பாலானோர் பசுபிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள். அனைவரும் காவா மயக்கத்தில் இருந்தார்கள். பேராசிரியர் சுந்தரமூர்த்திக்கு நேரம் போகவில்லை. மெல்ல எழுந்து சேகரின் அருகே வாங்கில் அமர்ந்து வலிந்து புன்னகைத்தார்.

சேகர், தான் சம்பாசனையின் நடுவே திடீரென எழுந்து வந்ததை நினைத்து நெளிந்தான். பின்னர் சிறிதுநேர இடைவெளி விட்டு, குறை நினைத்துக் கொள்ளாதீர்ள். இங்குள்ள இந்தியர்களின் நிலமை அப்படி என்றான்.

அப்படி என்றால் எப்படி? என்று புருவத்தை உயர்த்தினார் சுந்தரமூர்த்தி.

சுற்றும் முற்றும் பார்த்து ஒருவரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டபின் சேகர் பேசத்துவங்கினான்.

பிஜித் தீவில் இரண்டாயிரமாம் ஆண்டு மே மாதம், பிஜி-இந்தியர் மகேந்திர சௌத்ரி, ஜனநாயக முறைப்படி பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டதை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். சனத்தொகை எண்ணிக்கையில் அப்போது இந்தியர்கள், பூர்வீக பிஜியர்களிலும் பார்க்கச் சற்று அதிகமாக இருந்ததால் இது சாத்தியமாயிற்று. இந்தியர் ஒருவர் பிஜி நாட்டின் பிரதமராவதை, சுதேசிகளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இராணுவத்தில் சுதேசிகளான பிஜியர்கள் மாத்திரம் இருந்தார்கள். இதன் நீட்ச்சியாக இராணுவ புரட்சிக்காரர்களால் மகேந்திர சௌத்ரி கைதுசெய்யப்பட்டார். அவர் சிறை வைக்கப்பட்ட பின்பு, புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் அட்மிரல் பைனமராமா இருவரும், இதே காவா பானத்தை சேர்ந்து அருந்தி, தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்களாம். இதுபற்றிப் பல விமர்சனங்கள், கட்டுரைகள் அப்போது உலக ஊடகங்களில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான துவேச உணர்வுகள், சௌத்ரியின் வெற்றியைக் காரணம்காட்டி கூர்மை அடையத் துவங்கியது, எனச் சொன்னவன் தொடர்ந்து பேசாது தன் கைகளால் முகத்தை அழுத்தித்துடைத்து சற்று நேரம் அமைதியானான்.

அப்புறம்? எனக் கேட்டு சுந்தரமூர்த்தி கதையைத் தொடர அடியெடுத்துக் கொடுத்தார். 

Friday, 29 October 2021

வீரகேசரி Metro News வாரஇதழில் எழுதும் புனைவுக்கட்டுரைத் தொடர்.

நாட்டை நினைப்பாரோ...' (1)

ஆசி கந்தராஜா

1. காவா சடங்கு

காலையில் காவா (Kava) அருந்தும் சடங்கு. அதைத் தொடர்ந்தே மாலை ஒரு மணிக்கு, மாநாட்டின் முதல் அமர்வு எனச் சொன்னார்கள். சர்வதேச மாநாடொன்றில் இந்த ஒழுங்குமுறை, பேராசிரியர் சுந்தரமூர்த்தியின் மனதுக்கு நெருடலாக இருந்தது. பிஜியின் தலைநகர் சூவாவில், தென் பசிபிக் நாடுகளுக்கான பல்கலைக் கழகமொன்றுண்டு. அங்கு நடந்த விவசாய மாநாடான்றில், ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கச் சென்றபோதே அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

 பசிபிக் தீவுகளில் இயற்கையாக வளரும் தாவரம் 'காவா'. இது மிளகு மற்றும் வெத்திலை குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேரை காயவைத்து இடித்து மாவாக்கி, தண்ணீரில் ஊறவிட்டு வடிகட்டி, காவா பானத்தைத் தயாரிப்பார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தென் பசுபிக் நாடுகளான பிஜி, ஹவாய், டோங்கா, நியூகினியா உள்ளிட்ட தீவுகளில், திருமணம், பிறப்பு, மரணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களில் காவா பானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

காவா என்ற பானத்தை, பேராசிரியர் சுந்தரமூர்த்தி முன்பு சிட்னியில் வசிக்கும் அவரது பிஜி நண்பரின் வீட்டிலும் அருந்தியிருக்கிறார். களிமண்ணை தண்ணீரில் லேசாக கலந்து விட்டது போன்ற கலங்கல் திரவம் அது. மரத்தால் செய்யப்பட்ட பெரிய பாத்திரமொன்றில் வைத்திருந்தார்கள். பாயை விரித்து பாத்திரத்தைச் சுற்றி நிலத்தில் இருந்தவாறு, தும்பு செதுக்கிய தேங்காய்ச் சிரட்டையில் காவாவை அள்ளி அள்ளி மாலை வரை குடித்தார்கள். சிரிப்பும் அரட்டையும் பின்னர் தூக்கமும் காவாவுடன் சேர்ந்த சமாச்சாரங்கள் என, அன்று அவர் தெரிந்து கொண்டார். காவா அவருக்குக்கு ருசிக்கவில்லை. தொண்டை கட்டியது. நெடுநேரம் தலை கனத்து அம்மலாகவும் இருந்தது.

பிஜிக்கு வந்தபோது, மீண்டும் காவா அருந்த வேண்டிய சூழலில் சிக்கிக் கொண்டார். மாலை அமர்வில், அவர் ஆராய்ச்சிக் கட்டுரை வாசித்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். அப்போது தலை அம்மலாக இருக்கும் என்ற பதகளிப்பில் காவா குடிப்பதை தவிர்க்க முயன்றார். அவர்கள் விடவில்லை. காவா நிரம்பிய, பெரியதொரு சிரட்டையை கையில் திணித்துவிட்டார்கள். குடிப்பதுபோல பாசாங்கு செய்தவாறு அருகிலிருந்த பிஜி பேராசிரியரிடம் காவா சடங்கு பற்றிக் கேட்டார்.

Wednesday, 27 October 2021


‘பணச்சடங்கு’ - பல்லின பண்பாடுகளின் நுணுக்கமான பதிவு

அலைமகன்


ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து எழுத்தாளர் ஆசிகந்தராஜாவின் புதுவரவு, பணச்சடங்கு சிறுகதை தொகுப்பு. ஏற்கனவே அவரது சிறுகதைகள், குறுநாவல் போன்றவற்றால் தமிழுலகில் நன்கு அறியப்பட்டவர். மட்டுமல்லாது, புனைவுக்கட்டுரை என்ற வடிவத்தை தமிழுக்கு அறிமுகம்செய்தது ஆசி கந்தராஜா அவர்கள்தான். தனது பரந்த உலக அனுபவத்தையும், தனது தொழில் மூலமும், கல்வி மூலமும் பெற்ற விவசாய விஞ்ஞான அறிவியலையும் எளிமையாக புனைவு என்ற வடிவத்துக்குள் உள்ளடக்கி பரவலாக்கியவர். தமிழில் இந்த முயற்சிக்கு ஆசி கந்தராஜா அவர்களே முன்னோடியாவார்.

ஈழத்து எழுத்தாளர்களில் மிக நுணுக்கமாக யாழ்ப்பாணத்தின் வாழ்வியல் கோலங்களையும், வட்டார வழக்குகளையும் சித்தரிப்பதில் ஆசிரியர் கைதேர்ந்தவர். குறிப்பாக அறுபது, எழுபதுகளில் யாழ்ப்பாண வாழ்க்கை முறையையும் அதன் உள்ளடுக்ககளையும் இவரின் கதைகளில் எப்போதும் இரசிக்க முடியும். பெரும்பாலும் கதையின் நாயகர்கள் நனவிடை தோயும்போது வரும் விவரிப்புக்கள் உண்மையில் ஆசிரியரின் நனவிடை தோய்தல்தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

முதலில் இந்த கதைகளிலுள்ள பொதுவான அம்சங்களைப் பார்க்கலாம். இவற்றின் களங்கள் மிகவும் பரந்துபட்டவை. ஆஸ்திரேலியா, லெபனான், இஸ்ரேல், ஈரான், வன்னி, யாழ்ப்பாணம் என்று கதை நகரும் எல்லைகள் உலகளாவியவை. அந்தவகையில் இது ஒரு சர்வதேச, பல்லின பரிமாணம் கொண்ட தொகுப்பு. ஆனால் கதைகளின் கதையோட்டம் உண்மையில்ஒரு யாழ்ப்பாணத்து மனிதனின் பார்வையில் அல்லது அவனது அனுபவத்தில் இருந்துதான் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது. கதைசொல்லி ஒருபோதும் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை விட்டு விலகுவதில்லை என்பது அவதானிக்கப்பட வேண்டியது. உதாரணமாக தலைமுறைதாண்டிய காயங்கள் என்ற கதையை குறிப்பிடலாம். புலம்பெயர்ந்த எல்லா ஈழத்தமிழ் மக்களினதும் மனங்களில் அவர்களின் தாய்நிலத்து நினைவுகள் காலம் முழுவதும் வண்டல் மண்ணாக படிந்து போயிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நீண்ட கால நினைவுகள் மற்றும் தொன்மங்கள் வழியாக வந்த அந்த உணர்வை இலகுவில் அழித்துவிட முடியாது.

Tuesday, 19 October 2021



இணைய சஞ்சிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூவாமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது.

நீங்களும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை என அடித்துச் சத்தியம் செய்வீர்கள்.

ஆனால் அது உண்மையல்ல!

பலாமரம் பூக்கும். பலாவின் பூக்கள் பல்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறு வேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்.

பெண் பூக்கள், பெரும்பாலும் அடி மரத்திலும் கொப்பின் அடிப்பாகத்திலும் தோன்றும். சில சமயங்களில் மேல் கிளைகளிலும் குறைவான எண்ணிக்கையில் தோன்றுவதுண்டு.