12. 12. 2021 உதயன் சஞ்சீவியில்
பணச்சடங்கு:
யாழ்மண்வாசம் வீசும்
அந்நிய நிலங்கள்
-அலைமகன்-
ஆஸ்திரேலியாவில் வாழும்
ஈழத்து எழுத்தாளர் ஆசி கந்தராஜா அவர்கள் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர். புனைவுக்கட்டுரைகள், சிறுகதை, குறுநாவல் என பல
பரிமாணங்களில் படைப்புக்களை தந்துள்ள அவரின் சமீபத்திய வரவு பணச்சடங்கு எனும்
சிறுகதைத் தொகுப்பு. நூலாசிரியர்
உலகம் சுற்றியவர். விவசாய நிபுணராக உலகின் பல பல்கலைக்கழகங்களில், பல்வேறுபட்ட கலாச்சார
வெளிகளில் மனிதர்களை சந்திக்கும், அவர்களுடன் பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றவர். தான்கண்டறிந்த, அனுபவங்களை மிகவும்
சுவாரசியமாக புனைவுகளாகவும், புனைவுக்கட்டுரைகளாகவும் கொடுக்கும் இலக்கிய தாகம் நிறைந்தவர்.
பொதுவாகவே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றிய அவதானம் ஒன்றுண்டு. அதாவது தங்களின் தாயகத்து வாழ்க்கையைப்பற்றி தங்கள் படைப்புக்களில் அதிகம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுதான் அது. இந்த நனவிடைதோய்தல் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரியதல்ல. தங்களின் இளம் பருவத்தை வடிவமைத்த நினைவுகளே ஒரு மனிதனில் ஆழ்மன உணர்வுகளில் அவனது வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு செலுத்துகிறது. அந்த நினைவுகளை இலக்கியத்தில் வடிக்க முடியாதவர்கள் அல்லது அந்த நினைவுகளை வாழ்க்கைப்போட்டியின் அவசரத்தில் தொலைத்துவிட்டவர்கள் தூரதிஷ்டசாலிகள்.