Tuesday, 30 July 2024

 

மகானா நாடக வரலாற்றின் பொற்காலம்.

ஆசி கந்தராஜா.

கோமகளும் குருமகளும்(1968)Kanthasamy, Kohila, Kantharajah


திபர் திரு ஜெயரட்ணம் மற்றும் ஆசிரியர் கவிஞர் கதிரேசர்பிள்ளை ஆகியேரின் காலமே மகாஜனா நாடக வரலாற்றின் பொற்காலம் எனலாம்.

இக்காலத்தில் இலங்கைக் கலைக் கழகம், வருடாவருடம் அகில இலங்கை ரீதியில் நடாத்தி வந்த தமிழ்ப் பாடசாலைகளுக் கிடையேயான நாடகப் போட்டியில் தொடர்ந்து 5 வருடங்களாக மகாஜனா முதலிடம் பெற்றது.

காங்கேயன் சபதம் (1965), ஜீவமணி (1966), அம்பையின் வஞ்சினம் (1967), கோமகளும் குருமகளும்(1968), குரு தட்சனை (1969) என்பனவே வெற்றிபெற்ற 5 நாடகங்கள்.

முதல் நான்கு நாடகங்களிலும் குரும்பசிட்டி கந்தசாமி, ஆசி கந்தராஜா, ஸ்ரீசிவகுமார், வரதா என்னும் வரதாட்ஷனி கந்தையா, நாகேஸ்வரி, தெய்வானை, கோகிலா மகேந்திரன், ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்கள்.

முதல் நான்கு நாடகங்களில் நடித்தவர்கள் பாடசாலையிலிருந்து விலகிய பின் குரு தட்சனை என்னும் நாடகம் (1969) மேடையேறி இலங்கைக் கலைக்கழகப் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. இதில் நா. சண்முகலிங்கன், செ சுப்ரமணியம், இந்திரமதி, மாலினி, நடீன், தயாபரன், சுகுணசபேசன் ஆகியோர் நடித்தார்கள்.

நாடக வெற்றிகளுக்கெல்லாம் ஆதார சுருதியாய் பின்னணியில் இருந்து, மற்றவர்கள் தொட்டும்பார்க்காத இதிகாச காப்பியங்களிலே வரும் கிளைக் கதைகளைத் தேடி எடுத்து மேடைக்கதை அமைத்து வசனம் எழுதி நெறியாள்கை செய்து வழிகாட்டியாய்த் திகழ்ந்தது ஆசிரியர், செ. கதிரேசர்பிள்ளை அவர்களே.

மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாகச் சேர்ந்து நடிப்பதென்பது (காதலன் காதலி, கணவன் மனைவி போன்ற பாத்திரங்களில்) ஏதோ மிகப்பெரிய தப்பென்றிருந்த அந்தக் காலகட்டத்திலேயே மாணவ மாணவிகள் சேர்ந்து நடித்த நாடகங்களை மேடையேற்றி முன்மாதிரியாய்த் திகழ்ந்தது மகாயனாக் கல்லூரியே... 

Tuesday, 2 July 2024

காலச்சுவடு ஜூன் 2024 இதழில், அறியப்பட்ட பெரும் எழுத்தாளர் பெருமாள் முருகன்...


மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்

2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே.முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். நேரம் அதிகம் கிடைக்கும் டாக்டர் போல, ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சாதாரணமாக நினைத்துவிட்டேன்.

Thursday, 6 June 2024

சைவமுட்டை  சாத்தியமா?

அறிவியல் புனைகதை இலக்கியத்தில் ஒரு மைல் கல்

ஆசி கந்தராஜாவின் 'சைவமுட்டை'யை  குடைந்து ஒரு பார்வை.

-செல்லையா சுப்ரமணியம்-



ந்த நாள்களில் (ஏன் இன்றும்கூட இருக்கலாம்) எங்கள் ஊரில் கோயில் கொடியேறிவிட்டால் ஊர்ப் பக்கம் ஒரு மீன் வியாபாரியையோ இறைச்சிப் பெட்டிக்காரரையோ மருந்துக்குத்தானும் காணக்கிடைக்காது. திருவிழா எல்லாம் முடிந்து வைரவர் மடையும் முடிந்தபின்தான் மச்சக்கறியொலி எங்கள் காதில் இன்பத்தேன் வந்து பாய்ச்சும். அதுவரை மரக்கறிதான். எங்களைப் போன்ற மாமிச பட்சணிகள் தங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ள 'என்ன கறி வீட்டிலை' என்று கேட்டால், மரக்கறியை 'மரைக்கறி' என்போம்.  அப்படி ஒரு திருவிழாக்காலத்தில், கெலி தாங்கேலாமல் அவித்த முட்டையொன்று நான் சாப்பிடப்போய் அதைக்கண்ட சகோதரி குய்யோ முறையோவென்று கத்த 'முட்டை சைவம்தானே. மாட்டிலையிருந்து வாற பால் சைவமெண்டால் கோழியிலையிருந்து வாற முட்டையும் சைவம்தான். நீ சாப்பிடு மோனை' என்று முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போட்டு அம்மா சமாளித்த நிகழ்வு,  ஆசி கந்தராஜாவின்  இந்த 'சைவமுட்டை'யைப் பார்க்கும்போது மனதுள் எட்டிப்பார்க்கிறது.

அப்படி அன்றைக்கு முட்டை சைவமென்று சமாளித்த கதையும் இன்றைக்கு  இந்த 'சைவமுட்டை'யே ஒரு கதையாகிப்போனதுவும் விந்தைதான்! அறிவியல் புனை கதைகளின் தொகுப்பான  இந்தப் புத்தகத்தின் தலைப்பே ஒருவருக்கு விவகாரமாக தோன்றலாம். அதாவது முட்டையில் சைவ முட்டையும் உண்டா? முட்டையே மச்சமென்கிற போது  சைவமுட்டை எங்கே எப்போது  எப்படி வந்தது என்ற ஒரு ஐயப்பாடு தோன்றலாம். இப்படி விவகாரமான விஷயங்களை எடுத்துப்போட்டு தர்க்க ரீதியாக அவற்றை பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் விரித்துச் சொல்லி உண்மைகளை வெளிக் கொணர்வது தான் ஆசி கந்தராஜாவின் முத்திரை!  

Creative essays அல்லது imaginative essays என்று ஆங்கில இலக்கியத்திலே மிகவும் பிரபலமாக பேசப்படுகின்ற புனைவுக்கட்டுரை என்ற ஒரு விஷயம் தமிழுக்கு முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இந்த எழுத்தாளருக்கு முக்கிய வகிபாகம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது எனது எண்ணம். கட்டுரை வடிவம் வாசகனுக்கு கொஞ்சம் சலிப்பு ஏற்படுத்தும் என்பதால் அதன் நீட்சியாக இந்த அறிவியல் புனைகதைகளின் பிரசவம் நிகழ்ந்திருக்க வேண்டும்.

Monday, 6 May 2024

சிதைவுறும் கிடுகு வேலிகள்:

‘அகதியின் பேர்ளின் வாசல்’ காட்டும் சித்திரம்

-அலைமகன்-

ரு ஈழத்தமிழனுக்கு உலகம் என்பது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே ஆகும். இவர்களில் கிழக்கு ஐரோப்பிய அனுபவங்களை பெற்றவர்கள், அதனை முறையாக பதிவுசெய்தவர்கள் ஈழத்தில் மிகக்குறைவு. இருந்தாலும் இன்று உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் கிழக்கு ஐரோப்பா, அதிலும் குறிப்பாக கிழக்கு ஜெர்மனியின் பங்களிப்பு மிக அதிகம். எனது சிறு பிராயத்தில் எனதூரில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் எப்போதும் ஜெர்மனிக்கே செல்வது வழக்கம். அந்த மர்மத்தை சரியாக உணர்ந்துகொள்ள எனக்கு இரண்டு சகாப்தங்கள் தேவைப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் அனுபவங்களை பனிப்போர் சூழலின் பின்னணியில் விவரிக்கும் நாவல், அகதியின் பேர்ளின் வாசல்.



வரலாற்றில் சம்பவங்கள் திரும்பவும் நடக்கின்றன. முதல் தடவை அது சோகமாக முடிகிறது. அடுத்த தடவை அது கேலிக்கூத்தாக முடிகிறது என்ற கார்ல் மார்க்ஸின் வாசகம் ஆய்வாளர்களிடையே பிரபலமானது. நாம் ஏன் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு நியாயமான, தர்க்கபூர்வமான காரணங்கள்தான் மேற்கூறிய கூற்றுக்கள்.

வரலாறை மிக சுவாரஸ்யமாக அதே நேரம் முறையான தரவுகளுடன் தந்த நூல்கள் பல. அந்தவகையில் நள்ளிரவில் சுதந்திரம் (Freedom at midnight) முக்கியமான ஒரு நூல். அதேபோல தமிழர்களின் விடுதலைப் போரில் நடந்த நிகழ்ச்சிகளை காய்தல் உவத்தல் இன்றி பதிவுசெய்த நூல்களில் ஒன்று புஸ்பராசாவால் எழுதப்பட்ட "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்".

இந்த வழிமுறைகளை தவிர்த்து ஆசி. கந்தராஜா அவர்கள் இன்னொரு வழியை பின்பற்றுகிறார். அதாவது வரலாற்றை ஒரு புனைகதையூடாக வெளிப்படுத்துவது. வரலாற்றுப் புனைவு என்று கூறும்போது நாம் அறிந்த சரித்திரப் புதினங்களுடன் இதனை குழப்பிக்கொள்ளக்கூடாது. நாவலாசிரியர் தனது நாவலில் சித்தரிக்கும் வரலாற்றுக் காலகட்டத்தில் கூடவே வாழ்ந்து பயணித்திருக்கிறார் என்பதுதான் இங்கே உள்ள சிறப்பம்சம்.

1990ற்கு முன்னர், சோவியத் ஒன்றியத்தின் தலைநகர் மாஸ்கோ "புரட்சியாளர்களின் புனித பூமி" என்று வர்ணிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கிழக்கு ஜெர்மனியின் சர்வகலாசாலையில் உயர் கல்வி கற்கவும் அங்குள்ள வாழ்க்கையை வாழவும், தொடர்ந்து மேற்கு ஜெர்மனியின் நேரடி வாழ்வனுபவங்களும், பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பேர்ளின் சுவர் தகர்க்கப்பட்டபோது நடைபெற்ற நிகழ்வுகளை காணும் நேரடி சாட்சியாகவும் இருக்கும் அரிய வாய்ப்புக்களை பெற்றவர். இவை ஒரு ஈழத்தமிழனின் வாழ்வில் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் என்பதை மறுக்கமுடியாது. எனவேதான் அவற்றை முழுமையாக பதிவு செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

Monday, 29 April 2024

வேர்க்கடலை (கச்சான்கடலை) மற்றும் உருளைக்கிழங்கு




வேர்க் கடலை (கச்சான் கடலை) மற்றும் உருளைக் கிழங்கு வேரில் உற்பத்தியாவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா

மீண்டும் உங்களைக் குழப்புகிறேனோ?

வேர்க் கடலைத் தாவரம் நிலத்துக்கு மேலே மொட்டுவிட்டுப் பூத்தாலும் காய்ப்பது நிலத்துக்கு கீழே. பாமரமொழியில் சொன்னால் தரைக்கு மேலே பூக்கள், தரையின கீழே காய்கள் (பழங்கள்). வேர்க்கடலை தாவரம் சுமார் ஒரு அடி உயரம் அடையும் போது கருக்கட்டிய பூக்களிலிருந்து நீளமான கூரான ஆப்பு போன்ற அமைப்பு தோன்றி மண்ணுக்குள் போகும். இந்த ஆப்புகளே வேர்க்கடலையை மண்ணுக்குள் உருவாக்குகின்றன. அதாவது பெயர் வேர்க்கடலை என்றாலும் அவை வேர்களில் தோன்றுவதல்ல. இதனால் வேர்க்கடலை தாவரத்தை மண்ணில் படர விடுங்கள்.

உருளைக் கிழங்கு வேரிலா அல்லது தண்டிலா உற்பத்தியாகிறது என்ற கேள்விக்கு, இதிலென்ன சந்தேகம், கிழங்குகள் வேரில்தான் உற்பத்தியாகும் என்பீர்கள். உண்மைதான். அனேகமான கிழங்குகள் வேரிலேதான் உற்பத்தியாகும். ஆனால் உருளைக் கிழங்கு மட்டும் விதிவிலக்காக வேரில் உற்பத்தியாவதில்லை.

தாவரங்களில் பொதுவாக தண்டு, வேர், என வரையறை இருந்தாலும் தண்டின் ஒருபகுதி மண்ணுக்குச் சற்று கீழேயும் புதைந்திருக்கும். இதை ஆங்கிலத்தில் (Underground stem) என்போம். மண்ணுள் புதைந்திருக்கும் இத்தண்டிலிருந்தே  உருளைக் கிழங்கு உற்பத்தியாகிறது. உருளைக் கிழங்கு செடியை பிடுங்கிப் பார்த்தால் கிழங்குகள் அடித் தண்டைச் சுற்றி மட்டும் விளைந்திருப்பதைக் காணலாம்.

மரவெள்ளியில் வேர்போன பக்கமெல்லாம் வேரிலே கிழங்கு விழும். வேர் ஆழமாக வளரக் கூடாது என்பதற்காகவே, மரவெள்ளித் தடிகளை நடும்போது ஆழமாக ஊண்டுவதில்லை.

Thursday, 4 April 2024


அப்பிள் இலங்கையின் உலர்வலயத்தில் பூத்துக் காய்க்குமா?

இல்லை என்பதே இதற்கான பதில்.

நல்ல இன அப்பிள் விதைகளை ஐரோப்பாவில் வாங்கிச் சென்று இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் விதைத்து வளர்க்கும் முயற்சியில் சிலர் முயன்றுள்ளதாக அறிகிறேன். இவர்களின் ஆர்வத்தைப் பாராட்டும் அதேவேளை, ஐரோப்பிய அப்பிள் இனங்கள் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில கிளைவிட்டு வளர்ந்தாலும் அவை ஒருபோதும் மொட்டரும்பி பூத்துக் காய்க்காது. வீணாக நட்டமடையாதீர்கள்!

அப்பிள் மரங்கள் கடும்குளிர் சுவாத்தியத்துக்கே உரித்தான பயிர்.

விஞ்ஞானரீதியாக பழமரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை குறைகுளிர் வகை (Low Chill – பீச், பிளம்ஸ்), நிறைகுளிர் வகை (High Chill -அப்பிள்), குளிர் தேவையற்ற வகை (No Chill - மா பலா).

தாவர உடற் கூறு இயல்பின்படி அப்பிள் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் (freezing temperature hours) தேவை.

எனவே ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் குளிர் சுவாத்தியத்தில் வளர்ந்த அப்பிளை, இலங்கையின் வெப்மான வலயத்தில் வளர்த்தால் அவை கிளைவிட்டு வளரும் ஆனால் பூத்துக்காய்க்காது.

அப்பிள் மரங்கள் வின்ரர் (Winter) காலங்களில் இலைகளை முற்றாக இழந்து அதன் நுனி மொட்டுக்கள் உறைந்துபோய் இருக்கும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் Winter காலங்களில் குறிக்கப்பட்டளவு மணித்தியாலங்கள் உறைகுளிர் அப்பிளுக்குத் தேவை. பின்னர் வசந்த காலங்களில் (Spring) வெப்பநிலை கூட மொட்டுக்கள் அரும்பி பூவாகி காய்க்கத் துவங்கும். குறிப்பாகச் சொன்னால் வின்ரரில் கிடைத்த உறைகுளிர் நிலையின்போது, அப்பிள் தாவரத்தின் கலங்களுக்கு உள்ளே மொட்டரும்பி பூப்பதற்கான  ஹோமோன் ஆயத்தங்கள் நடக்கும். (உறைகுளிர் கிட்டத்தட்ட 5 பாகை சதமளவுக்கு (C) கீழே. இது அப்பிள் இனத்துக்கு இனம் மாறுபடும்).

இந்தியா காஸ்மீரில் வளரும் அப்பிள், குறை குளிர் வகை (Low chill variety). அவை நுவரெலியாவின் மலை உச்சிகளில் காய்க்கும். ஆனால் ஐரோப்பிய வகை பூக்காது, காய்க்காது.

இதே போல, நுவரேலியாவில் நன்கு வளரும் பிளம்ஸ் மரத்தை யாழ்ப்பாணத்தில் வளர்த்தால் அந்த மரம் நன்கு பூக்காது. இதேபோன்றுதான் யாழ்ப்பாண மாமர இனங்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களில் நன்கு காய்ப்பதில்லை. இவையே பழமரங்கள் காய்ப்பதிலுள்ள சூட்சுமங்கள்!

ஆசி கந்தராஜா. சிட்னி.

 


வாழைப்பழத்திலும் விதைகள் உண்டு!

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தத்துவவியல் பேராசான் காசிநாதன், இருபது வருடங்களுக்கு மேலாக மெல்பேர்னில் வாழ்கிறார். இருந்தாலும் பொதுவெளியில் அவர் தன்னைப் பெரிதும் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. இப்படிச் சிட்னியில் அமைதியாக வாழும் இன்னொரு பேராசிரியர் இந்திரபாலா. இவர் இலங்கையில் பெரிதும் அறியப்பட்ட வரலாற்றாசிரியர், தொல்பொருள் ஆய்வாளர். இவருடன் எனக்குப் பெரிய தொடர்பில்லை. காணுமிடத்தில் வணக்கம் சொல்லி மரியாதை செலுத்துவதுடன் சரி. இந்த வரிசையில் இணைந்து கொள்ளும் இன்னுமொருவர் சிட்னியில் வாழ்ந்து மறைந்த தமிழ்ப் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம். இவர்கள் எல்லோரும், எமது சமுதாயத்தின் பொக்கிஷங்கள். எமது சமூகம் இவர்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ? என்ற ஆதங்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு. புலம் பெயர் தேசத்தில் 'எல்லோருக்கும் எல்லாம் தெரியும்' என்ற நிலைப்பாடுதான் இதற்கான சுருக்கமான பதில்.

கலாநிதி காசிநாதனுடன் நான் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். அவருடன் பேசுவது உவப்பானது. பல விஷயங்களை அவரிடமிருந்து அறிந்துகொள்ளலாம். சமீபத்தில் அவருடன் பேசியபோது, தனது பின் வளவில் செழிப்பாக வளர்ந்த வாழையொன்று ஐந்து சீப்பில் குலை தள்ளியிருப்பதாகச் சொன்னார்.

அப்படியா? என நான் ஆச்சரியப்பட்டேன். ஐந்து சீப்பில் வாழை, குலை தள்ளுவது ஒன்றும் புதினமில்லை. ஆனால் அவர் வாழும் குளிர்கூடிய மெல்பேர்னில் அது ஆச்சரியம்தான்.

அவுஸ்திரேலியா ஒரு நாடு மட்டுமல்ல, கண்டமும்கூட! இங்கு வெப்ப வலயம், உபவெப்ப வலயம், குளிர் வலயம் என மூன்று மண்டலங்களும் உண்டு. பூமத்தியரேகைக்கு கீழே, பூமிப்பந்தின் தென் முனைப் பக்கமாக அவுஸ்திரேலியா அமைந்திருக்கிறது. இதனால் பூமத்தியரேகைக்கு மேலே இருக்கும் நாடுகளுக்கு, அவற்றின் குளிர் காலங்களில் விவசாய உற்பத்திகளைப் பெருமளவு ஏற்றுமதி செய்யமுடியும். இதுவே இந்த நாட்டுப் பொருளாதார வெற்றியின் சூக்குமம் எனச் சொல்வார்கள்.

இந்தவகையில் பலதும் பத்தும் பேசிய காசிநாதன் சுழன்றடித்து மீண்டும் வாழைக்குலை விஷயத்துக்குவந்து, வாழைப்பழம் நிறைய, மொட்டைக்கறுப்பன் நெல்லு சைஸில், கறுத்தக் கொட்டைகள் இருக்குதடாப்பா, எனச் சொல்லிச் சிரித்தார்.

காலாதிகாலமாக, எமக்குத் தெரிந்த வாழைப்பழத்தில் விதைகள் இல்லை. அன்னாசியிலும் இல்லை. பிற்காலங்களில் இனவிருத்தி செய்யபட்ட திராட்சை, தர்பூசணி, பப்பாளியிலும் விதைகள் இல்லை. இதுபற்றிய விபரம் அறியவே காசிநாதன் என்னைத் தொடர்பு கொண்டார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் தனது துறை சார்ந்த நூல்கள், மட்டுமல்ல அதற்கு வெளியேயும் நியை வாசிப்பவர். அதனால் அறிவியல் ரீதியாக அவருக்கு விளக்கம் சொன்னேன்.

Thursday, 29 February 2024

மரபணு வினாவிடை

 ஆசி கந்தராஜா



ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் எழுதிய முதலாம் சைவ வினாவிடையை நீங்கள் படித்திருக்கலாம். ஏழு அத்தியாயங்களைக் கொண்ட சைவ வினாவிடையின் முதலாம் அத்தியாயம் 'கடவுள் இயல்' பற்றியது. அதிலுள்ள முதலாம், மூன்றாம், ஏழாம் கேள்விகள் இவை.


உலகத்துக்குக் கருத்தா யாவர்?

·         சிவபெருமான்.


சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் என்ன?

·         படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.


சிவபெருமானின் திருக்குமாரர்கள் யாவர்?

·  விநாயகக் கடவுள், வீரபத்திரக் கடவுள், வைரவக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.


விநாயகர் முதல் முருகன் வரை, அனைத்து குமாரர்களும் சிவபெருமானின் பிள்ளைகளா? சிவபெருமான் செய்யுந் தொழில்கள் என்ன? என்ற வினாக்களுக்கு நாவலர் சொன்ன விடைகள் முற்றிலும் சரியானதா? என்ற கேள்விகள் ஒரு சிலரால் இன்றும் கேட்கப்படுகிறன. உமாதேவியார் தனது ஊத்தையை உருட்டியதால் தோன்றியதே பிள்ளையார் என வடஇந்திய நூல்களும் சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய ஆறுபொறிகள் ஒன்றுசேர்ந்து ஆறுமுகமாகி முருகக் கடவுளாகியதாக தென்இந்திய புராணங்களும் சொல்கின்றன. இதன்படி பிள்ளையாரும் ஆறுமுகனாகிய முருகனும் கலவிமுறை மூலம் தோன்ற வில்லை, அவர்கள் சிங்கிள் பெற்றேருக்கு குளோனிங் மூலம் பிறந்திருக்கவேண்டுமென வாதிட்டான், என் நாத்திக நண்பனொருவன். இதன்மூலம் குளோனிங் என்னும் நவீன தொழில்நுட்ப முறை நமது சமயத்தில் ஆதிகாலத்திலேயே இருந்ததை ஒத்துக்கொள்ளுகிறாயா? என நண்பனுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்தேன் நான்.

எதுஎப்படியிருந்தாலும் இந்து சமயத்தில் சொல்லப்பட்ட ஆழமானதும் சிக்கலானதுமான பல விஷயங்களை, பாமரர்களும் புரியும் வண்ணம் ஆறுமுக நாவலரால் வேறு விதமாக எழுதியிருக்க முடியாது என்பது எனது அபிப்பிராயம். அந்த வகையில் விவசாய அறிவியல் சார்ந்த விஷயங்களை சாமானியர்களும் புரிந்துகொள்ள, நாவலரின் வழியில் வினா விடைகளாகத் தரும் எனது கன்னி முயற்சியே இந்த அறிவியல் புனைவு.

Thursday, 15 February 2024

சைவமுட்டை

 

பிரதி புதன்கிழமைதோறும் ஆஸ்திரேலிய தாயகம் வானொலியில், நிலாமுற்றம் என்னும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கிறேன். வாரம்தோறும் ஒரு தலைப்பு தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி அறிவுபூர்வமாகவும் ஜனரஞ்சகமாகவும் வானலைகளில் கலந்துரையாடப்படும். அன்றைய நிகழ்ச்சியின் தலைப்பு, கோழிமுட்டை சைவமா அல்லது அசைவமா என்பது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து நிகழ்ச்சி சூடுபிடித்த நிலையில், கோழிகள் முட்டையிட சேவல் தேவையில்லை என்பது, உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? என்ற கேள்வியை முன்வைத்தேன்.



வழமைக்குமாறாக நேயர்களிடமிருந்து இந்தக் கேள்விக்கு எதிர்வினைகள் அதிகம் வரவில்லை. இதனால் நேயர்களை உசுப்பேத்த குசும்புக் குறிப்பொன்றை வானலையில் தவழவிட்டேன். பண்ணைகளிலிருந்து சந்தைக்கு வரும் முட்டைகள் சைவமுட்டைகள். எனவே சைவக் கோவில்களில் கொடுக்கப்படும் புளிச்சாதம், தயிர்ச்சாதத்துடன் அவிச்ச முட்டை ஒன்றையும் பிரசாதமாக வழங்கலாம், கோவில்களில் இதை நடைமுறைப் படுத்தினாலென்ன? என நான் சொல்லிமுடித்ததும் நிலையக்கலையக தொலைபேசிகள் சூடேறத் துவங்கின. கோவில் குருக்கள் முதற்கொண்டு சமுகத்தில் தங்களைச் சைவப் பழங்களாக இனங்காட்டும் பெருந்தலைகள் வரை என்னை ஒரு பிடிபிடித்தார்கள். நான் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய விஷயங்களையே சொல்லிச் சமூகத்தைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டினார்கள். இதனால் ஒலிபரப்பு விதிகளுக்கமைய எனது கருத்தை நியாயப்படுத்த, சைவமுட்டை பற்றிய அறிவியல் விஷயங்களை விளக்க ஆரம்பித்தேன். 

Wednesday, 7 February 2024

சயந்தனின் ஐமிச்சங்கள்.

 

ஐமிச்சம் 1:

பூக்காமல் காய்க்கும் மரமெது?

பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டி எதையும், சயந்தன் தவற விடுவதில்லை. உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வந்த குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றிலே, பூக்காமல் காய்க்கும் மரமெது? என்ற கேள்வியைக் கேட்டு, கீழே பதிலாக பலா மரம் என்றிருந்தது. சயந்தனும் பலா மரங்களில் பூக்களைக் கண்டதில்லை. அவனது ஆச்சியும் அது உண்மைதான் என எண்பித்தார். இது எப்படிச் சாத்தியம்? என அறிய, மாகாண விவசாய அதிகாரியாகப் பணிபுரிந்த வேதவல்லி அக்காவைக் கேட்டான்.

பலா பூக்குமடா, எவர் சொன்னவர் பூக்காதென்று? பலாவின் பூக்கள் பச்சைநிறமாக இருக்கும். அதற்கு மணமோ, கவர்ச்சியோ இருக்காது. ஏனெனில் பலாவில் பூச்சி மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆண் பூக்களும் பெண் பூக்களும் இங்கு வேறுவேறாக ஒரே மரத்தில் இருக்கும். ஆண் பூக்கள் நீட்டாக, ஓரலாக பெரும்பாலும் மரத்தின் மேல்க் கிளைகளில் காணப்படும். இவை ஒரிரு நாள்களுக்குள் உதிர்ந்துவிடும்'.

பெண் பூக்கள்?